திருச்சி மாவட்ட பாஜக மகளிர் அணி சார்பில் மத்திய அரசு திட்டங்கள் குறித்து மகளிர் சுய உதவிக் குழுவினருடன் வினாடி வினா போட்டி திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் திருச்சி மேற்கு மற்றும் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த 13 மகளிர் சுயஉதவிக் குழுக்களை சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் திருச்சி பாராளுமன்ற தொகுதியின் இணை அமைப்பாளர்கள் டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் மற்றும் ஒண்டி முத்து ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். இதில் பாரதப் பிரதமர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் பெயர் என்ன?, 12 வாரங்களாக இருந்த பெண்கள் மகப்பேறு விடுப்பு எத்தனை நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது? என்பன உள்ளிட்ட 18 கேள்விகள் கேட்கப்பட்டது. பெரும்பாலான கேள்விகளுக்கு மகளிர் சுயஉதவி குழு பெண்கள் ஆர்வமுடன் சரியான பதிலை அளித்தனர். வெற்றி பெற்ற மகளிருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட பாஜக மகளிர் அணி தலைவி ரேகா, கன்டோன்மென்ட் பகுதி மண்டல் தலைவர் கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு பின்னர் திருச்சி பாராளுமன்ற தொகுதி இணை அமைப்பாளர் டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் செய்தியாளர்களிடம் பேசுகையில்…
மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் கடைக்கோடி மக்களையும் சென்றடைந்துள்ளது என்பதனை இந்த வினாடி வினா போட்டி உணர்த்தியுள்ளது. இதில் பங்கேற்ற பெண்கள் ஏறத்தாழ அனைத்து கேள்விகளுக்கும் சரியான பதிலை அளித்ததே இதற்கு சான்றாக உள்ளது. வரும் பாராளுமன்ற தேர்தலில் 400 க்கும் மேற்பட்ட தொகுதிகளை வென்று மூன்றாவது முறையாக மீண்டும் மோடியை பிரதமர் ஆகுவதே எங்களது லட்சியம். தலைமை வாய்ப்பளித்தால் கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் திருச்சியில் போட்டியிடுவேன் என தெரிவித்தார்.