திருச்சி கே.கே.நகர் பகுதியில் உள்ள பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் பொங்கல் விழா கொண்டாட்டம் இன்று நடைபெற்றது. இவ்விழாவில் திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு பொங்கல் வைத்து மாணவ, மாணவிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் வழங்கினார். பின்னர் மாணவ மாணவிகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கி.வீரமணி கூறுகையில்..,
ராமர் கோவில் திறப்பு விழாவில் இந்தியா கூட்டணியை சேர்ந்த பெரும்பாலான கட்சிகள், கலந்து கொள்ளப் போவதில்லை என அறிவித்திருப்பதை நாங்கள் வரவேற்கிறோம். பக்தி என்பது அவரவர் தனிச்சொத்து ஆனால் பா.ஜ.க வினர் அதை அரசியலுக்கு பயன்படுத்துகிறார்கள். கட்டி முடியாத கோவிலை பிரதிஷ்டை செய்ய கூடாது என 4 சங்கராச்சாரியார்கள் கூறியுள்ளார்கள். இந்து மத விவகாரங்கள் தொடர்பாக சங்கராச்சாரியார்கள் தான் கருத்து கூற முடியுமே தவிர பாஜகவினர் கூற முடியாது. பாஜகவை எதிர்ப்பவர்கள் சனாதான விரோதிகள், இந்து மத விரோதிகள் என கூற கூறும் பாஜகவினர் தற்பொழுது சங்கராச்சாரியார்களை பார்த்து அவ்வாறு கூறுவார்களா? முடிந்தால் பா.ஜ.க வினர் அதை கூறட்டும். இல்லையென்றால் அவ்வாறு மற்றவர்களை கூறுவதை நிறுத்த வேண்டும்.
தேர்தல் வரக்கூடிய சூழலில் தற்பொழுது பாஜகவினர் ராமனையே வேட்பாளராக நிறுத்துகிறார்கள். ராமன் ஒருபோதும் வேட்பாளராக கூடாது.
ஓ பன்னீர்செல்வம் கோட்டைக்கு செல்வேன் என கூறாமல் ஜெயிலுக்கு செல்வேன் என கூறி வருகிறார். ஆண்டிகளுக்கு கூட மடம் இருக்கிறது ஆனால் ஓ பன்னீர் செல்வத்திற்கு அது கூட இல்லை. அவருக்கு இடம் எங்கும் இல்லை. எங்கு போவது என தெரியாமல் நின்று கொண்டிருக்கிறார்.
துணை முதல்வராக உதயநிதி தேர்ந்தெடுக்கப்பட உள்ளார் என்பது குறித்த கேள்விக்கு அதனை அறிவிப்பவர்கள் அறிவிக்க வேண்டும், அவருக்கு தகுதி இருக்கா இல்லையா என்பதை முடிவு செய்ய வேண்டியவர் முதல்வர். அமைச்சர்கள் நியமனத்தில் இது போன்ற செயலில் ஆளுநர் ஈடுபட்டு மூக்கு உடைபட்டு இருக்கிறார். அவருடைய பணியை சிறப்பாகவும் அடக்கமாகவும் செய்து வருகிறார். அதனால் அவர் அனைத்து தகுதிகளையும் பெற்றவர் என கூறினார்.