ஹோட்டலை காலி செய்ய வேண்டுமென்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளோம்; சாதகமான தீர்ப்பு வரும் என நம்புகிறோம் – எஸ்.ஆர்.எம் குழும இயக்குநர் பேட்டி!
திருச்சி காஜாமலையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துக்கு சொந்தமான 4.3 ஏக்கர் நிலத்தில் எஸ்.ஆர்.எம் ஹோட்டல் உள்ளது. 1994ல் 30 ஆண்டு குத்தகைக்கு பெற்ற நிலத்தில் எஸ்.ஆர்.எம் ஹோட்டல் கட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் 30 ஆண்டு குத்தகை முடிந்ததை அடுத்து இடத்தை காலிசெய்யுமாறு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் நோட்டீஸ் அனுப்பியது. இதனை தொடர்ந்து நோட்டீஸை ரத்துசெய்யக் கோரி எஸ்.ஆர்.எம் ஹோட்டல் தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார். இதில், குத்தகை காலத்தை நீட்டிக்கக் கோரிய எஸ்.ஆர்.எம் ஹோட்டலின் மனுவை அரசு நிராகரித்ததை தனி நீதிபதி ரத்து செய்தார்.
இதையடுத்து, தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து கடந்த வருடம் சுற்றுலா வளர்ச்சிக்கழகம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு நீதிபதிகள் ஜெகதீஸ் சந்திரா, பூர்ணிமா அமர்வு விசாரணை செய்து வந்த நிலையில், நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவில் நீதிபதிகள் கூறியதாவது;
அரசு நிலத்தில் இருந்து திருச்சி எஸ்.ஆர்.எம் ஹோட்டல் குத்தகையை நீட்டித்து தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அளித்த தீர்ப்பை இரு நீதிபதிகள் அமர்வு ரத்து செய்தது. மேலும், குத்தகை உரிமம் முடிந்த பிறகு அதை நீட்டிப்பதை உரிமையாக கோர முடியாது. மேலும் எஸ்.ஆர்.எம். விடுதியின் குத்தகையை நீட்டிப்பது முழுக்க முழுக்க அரசின் முடிவு ஆகும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் பற்றிய நீதிபதி சுவாமிநாதனின் கருத்துகளை நீக்க தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்யப்பட்டு இருந்ததை அடுத்து, தமிழக சுற்றுலாத்துறை பற்றி ஜி.ஆர்.சுவாமிநாதன் தெரிவித்தது அவரது தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், தமிழக சுற்றுலாத்துறை ஓட்டல் நடத்துவது பற்றி நீதிபதி சுவாமிநாதன் தெரிவித்த கருத்து நீக்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் தனி நீதிபதி உத்தரவு ரத்து செய்யப்பட்டதால் எஸ்.ஆர்.எம். ஓட்டல் நிறுவனம் விடுதியை காலி செய்ய வேண்டும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் எஸ்.ஆர்.எம் குழுமத்தின் இயக்குனர் பார்த்தசாரதி திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,…
தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா ஆட்சி காலத்தில், திருச்சி மாவட்டத்தின் வளர்ச்சிக்காக இந்த பகுதியில் ஹோட்டல் கட்டுவதற்கு வாய்மொழியாக உத்தரவு பிறப்பித்தார். இதனைத் தொடர்ந்து எஸ்.ஆர்.எம் தலைவர் திருச்சியில் 1994 ஆம் ஆண்டு ஹோட்டல் கட்டினார். பின்னர் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சுற்றுலாத்துறை அதிகாரிகள், அரசு நிலத்தில் ஹோட்டல் நடத்துவதற்கு 99 வருடத்திற்கு குத்தகைக்கு விடப்படும் என வாய்மொழியாக தெரிவித்தனர். ஆனால் சில காரணங்களால் எங்களுடைய ஹோட்டல் கட்டிய பிறகு வற்புறுத்தி கைகள் கட்டப்பட்டு 30 வருடங்களுக்கு ஒப்பந்தம் செய்ய நாங்கள் கையெழுத்து இட்டோம். அன்றிலிருந்து அரசு தெரிவித்த குத்தகை தொகை உள்ளிட்ட அனைத்து வரிகளையும் முறையாக இன்றைய தேதி வரை செலுத்தியுள்ளோம். ஆனால் ஒரு சில நபர்கள் மூலம் அழுத்தம் தரப்பட்டு எங்களுடைய ஹோட்டலை காலி செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் என சந்தேகமப்படுகிறோம். குறிப்பாக ஒப்பந்தம் கையெழுத்து இட்டபோது அவர்கள் தெரிவித்த குத்தகை தொகையை விட தற்போது, கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு தொகையை அதிகரித்து எங்களிடம் கேட்கிறார்கள் இது எந்த விதத்தில் நியாயமாகும்.
ஆகையால் ஹோட்டலை காலி செய்ய வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நாங்கள் மனு தாக்கல் செய்தோம். அதற்கு பதில் கிடைத்துள்ளது. தற்போது ஹோட்டலை காலி செய்வதற்காக எந்த நடவடிக்கைகளும் செய்யக்கூடாது என அந்த மனுவில் உச்ச நீதிமன்றம் தெளிவாகக் கூறியுள்ளது. மேலும் எங்களுடைய கோரிக்கை ஒன்றுதான், ஹோட்டல் ஆரம்பித்த ஆண்டிலிருந்து இதுவரை நாங்கள் லாபம் எதையும் ஈட்ட வில்லை. ஆனாலும் அரசு அறிவித்த குத்தகை தொகை உள்ளிட்ட அனைத்து வரிகளையும் முறையாக கட்டி வருகிறோம். இந்நிலையில் மீண்டும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அப்போது இருந்த சுற்றுலாத்துறை வளர்ச்சி அதிகாரி கூறியது போன்று 99 வருடத்திற்கு இந்த இடத்தை குத்தகைக்கு கொடுக்க வேண்டும். நாங்கள் தொடர்ந்து வரிகளை முறையாக கட்டி வருகிறோம். ஆனால் வேண்டுமென்றே சிலர் எங்களுக்கு இன்னல்களை தருகிறார்கள். இதிலிருந்து எங்களை மாநில அரசு பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
மேலும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்னும் பத்து நாட்களில் விசாரணைக்கு வரும். நிச்சயம் எங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும் என்று நாங்கள் நம்புகிறோம் என்றார்.
Comments are closed.