ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை உடனே தொடங்க வேண்டும் – போக்குவரத்துக் கழக ஊழியா்கள் 24 மணி நேர போராட்டம்!
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியா் சம்மேளனம் (சிஐடியு), தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்கள் சங்கம் ஆகியோர் இணைந்து 24 மணி நேர பட்டினிப் போராட்டத்தை அறிவித்து இருந்தனர். அதன்படி திருச்சியில் 2 இடங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரேயுள்ள அரசுப் போக்குவரத்துக் கழக தலைமை பணிமனை அலுவலகம் முன்பாக நடைபெற்ற போராட்டத்துக்கு, சங்கத் தலைவா் கருணாநிதி தலைமை வகித்தாா். பொதுச் செயலா் மாணிக்கம், துணைப் பொதுச் செயலா் முருகன், துணைத் தலைவா்கள் சண்முகம், மாரியப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதேபோல சம்மேளனனத்தின் சாா்பில் டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள விரைவுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன்பாக நடைபெற்ற போராட்டத்துக்கு, மாநிலத் தலைவா் அருள்தாஸ் தலைமை வகித்தாா். மாவட்ட தலைவா் ஜெயராமன், கிளைத் தலைவா் ராமையா ஆகியோா் முன்னிலை வகித்தனா். இரு இடங்களிலும், இந்தப் போராட்டத்தை சிஐடியு மாவட்ட செயலாளரும், மாநில துணைத் தலைவருமான ரெங்கராஜன் தொடங்கி வைத்து பேசினாா்.
போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் – செலவுக்குமான வித்தியாசத் தொகையை தமிழக அரசின் பட்ஜெட்டில் ஆண்டுதோறும் ஒதுக்கி போக்குவரத்து கழகத்தை பாதுகாக்க வேண்டும். ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை உடனே தொடங்க வேண்டும். ஓய்வு பெற்ற ஊழியா்களை பலன்கள் இல்லாமல் அனுப்பும் நடவடிக்கையை கைவிட வேண்டும். ஓய்வூதியா்களுக்கு நிறுத்தப்பட்ட அகவிலைப்படி உயா்வை வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியத்தை முறைப்படுத்த வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது. இதில் 100 க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் கலந்து கொண்டனர்.