திருச்சி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகத்தில், பாஜக உறுப்பினர் சேர்க்கை குறித்து மாவட்ட நிர்வாகிகளுடன் இன்று தமிழக பாஜக ஒருங்கிணைப்பாளர் ஹெச். ராஜா ஆலோசனை நடத்தினார். இந்நிகழ்வில் பாஜக பிரமுகர் அமர்பிரசாத் ரெட்டி, திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
பின்னர் ஹெச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்….
ஹரியானாவில் 52 இடங்கள் பெற்று பாஜக ஆட்சியைப் பிடிக்கும். காஷ்மீரில் தொங்கு சட்டமன்றம் ஆட்சி அமைவதற்கான வாய்ப்பு உள்ளது. இந்து சமுதாயத்தை ஜாதிகள் பிளந்து, சிறுபான்மையினரை மதத்தால் இணைத்து தேர்தலில் வெற்றியை பெற்று விடலாம் என்று காங்கிரஸ் நினைக்கிறது. அதற்கு மக்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளார்கள் மூன்றாவது முறையாக அரியானாவில் பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றுகிறது. அதற்கு காரணம் மத்திய அரசாங்கத்தின் திட்டங்கள் அணுகுமுறையும் தான். பா.ஜ.க வை ஹரியானா மக்கள் ஆதரவளித்து பெரும்பான்மை பலத்தோடு வெற்றி பெற செய்து இருக்கிறார்கள். இந்த வெற்றியைத் தந்த ஹரியானா மக்களுக்கு நன்றி.
ஒரு அரசு எப்படியெல்லாம் ஏற்பாடு செய்யக்கூடாது என்பதற்கு ஒரு அடையாளமாக மெரினாவில் நடைபெற்ற ஏர் ஷோ நடந்துள்ளது. மக்களுக்கு குடிநீர் கூட கொடுக்க முடியவில்லை இந்த அரசால். தனது நண்பர்கள் நலனுக்காக விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தபோது கார் பந்தயம் நடப்பதற்கு முன்னேற்பாடுகளை தொடர்ந்து கவனித்தவர், துணை முதல்வராக உதயநிதி பதவியேற்ற பின்னர் தனது பணியை மறந்துவிட்டார்.
தமிழக காவல்துறை இதுவரையிலும் எந்த ஒரு தீவிரவாதிகளையும் கைது செய்யவில்லை, கஞ்சாவை தவிர வேறு எந்த ஒரு போதைப் பொருளையும் தமிழக காவல்துறை பிடித்ததாக தெரியவில்லை, எந்த வகையிலும் தோற்றுப் போன அரசாக திமுக ஆட்சியில் உள்ளது. 2026 இல் மக்கள் நிச்சயம் தோற்கடிப்பார்கள்.
ஆர்டிகல் 365 சட்டத்தை பயன்படுத்திய பிறகு எந்த ஒரு சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படவில்லை, ராணுவத்தின் மீது மக்கள் தாக்குதல் நடத்தவில்லை எனவே ஜம்மு காஷ்மீர் மக்கள் அமைதி விரும்புகிறார்கள் என்பதையே காட்டுகிறது.
ஓபிஎஸ் பாஜகவின் ஒரு மதிப்புமிக்கவர். அவர் பாஜகவில் இணைவதற்கு முன்னதாக, அது தொடர்பாக எந்த ஒரு கருத்தும் கூற முடியாது.
ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என திருமாவளவன் கேட்டது நியாயம், ஆனால் கூட்டணிக்கு மட்டும் தான் கட்சிகள் தேவை அதிகாரத்திலும் ஆட்சியிலும் பங்கு கூடாது என்பதுதான் திமுகவின் நிலைப்பாடு.
விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாடு முடிந்தவுடன் தமிழகத்தில் மது ஒழிந்துவிட்டதா, அது திமுகவும் விடுதலை சிறுத்தைகளும் நடத்திய நாடகம். மது உற்பத்தியாளர், விற்பனையாளர்கள்தான் இந்த மாநாட்டின் பங்காளியாக இருந்தார்கள், இது ஒரு நாடகம் தான் தவிர ஒரு உண்மையான மாநாடாக இல்லை.
விஷச்சாராயத்தால் உயிரிழந்த விதவைகளை கனிமொழி ஏன் சந்திக்கவில்லை, 2016 ஆம் ஆண்டு கள்ளச்சாராயம் டாஸ்மாக் உயிரிழப்பு குறித்தும் தமிழகத்தில் அதனால் விதவைகள் அதிகரித்துள்ளதாகவும் பேசிய கனிமொழி தற்போது அதனை மறந்துவிட்டார்போல.
1937 ஆம் ஆண்டு ராஜாஜி மதுவிலக்கு சட்டத்தை அமல்படுத்தினார், ஆனால் குடிக்க வைத்து குடிகெடுத்தவர் கருணாநிதி என்பதால் கருணாநிதி கட்டவுட் அந்த மாநாட்டில் வைக்கவில்லை. மாறாக ராஜாஜியின் படத்தை வைத்துள்ளார் அவருக்கு பாராட்டுக்கள்.
அரசின் கஜானாவை காலி செய்துவிட்டு அரசு ஆசிரியர்களுக்கு சம்பளம் போட முடியாத நிலையில் தற்போது தமிழக அரசும் பள்ளிக் கல்வித் துறையும் உள்ளது. அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போட முடியாத நிலை தமிழகத்தில் அடுத்த மூன்று மாதத்தில் உருவாகும். நிர்வாக திறன்மையின்மைக்கு மத்திய அரசை குறை சொல்வதை ஏற்கமுடியாது.
அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் நீக்கியதை வரவேற்கிறேன். அவர் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இணைய வேண்டும். ஆர் எஸ் எஸ் வளர்ந்தால்தான் தமிழகத்தில் பட்டியல் சமுதாய மக்கள் பாதுகாப்பாக இருப்பார்கள், சமூக நீதி வேண்டும் என்றால் திமுக ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும். திமுக என்பது இந்து விரோத அமைப்பு தான், அதன் இந்து விரோத கொள்கைகள் மாறாது என தெரிவித்தார்.
Comments are closed.