துறையூரில் நாட்டு துப்பாக்கியுடன் இருவர் கைது!
திருச்சி மாவட்டம் துறையூர் காவல் நிலைய போலீசார் முருகூர் பிரிவு சாலை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 வாலிபர்களை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரணை செய்தனர். மேலும் அவர்கள் கொண்டு வந்திருந்த பையையும் சோதனை செய்தனர். அதில் அவர்கள் இருவரும் திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சஞ்சய் (வயது 22), உலகநாதன் (எ) வடிவேல் (22) என்பதும், பையில் வைத்திருந்த அரசின் உரிய அனுமதி இல்லாத துப்பாக்கியை கொண்டு வேட்டைக்கு சென்று கொண்டிருப்பதும் தெரிய வந்தது. இதனையடுத்து இருவரையும் கைது செய்த துறையூர் போலீசார், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்தும் ஒற்றை குழல் நாட்டுத்துப்பாக்கி ஒன்று, இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். துறையூர் அருகே அனுமதி இல்லாத நாட்டுத்துப்பாக்கி போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.