சர்வதேச தடகள போட்டியில் தங்கம் வென்ற வீரர்களுக்கு திருச்சி ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
நேபாளம் நாட்டில் சர்வதேச அளவிலான தடகளப் போட்டிகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த போட்டிகளில் திருச்சி மாவட்டத்தில் இருந்து பயிற்சியாளர் நாகராஜ் தலைமையில் 60 பேர் கலந்து கொண்டனர். இதில் திருச்சி சமயபுரம் மற்றும் தாளக்குடி பகுதியை சேர்ந்த அபினேஷ், ஜெயசூர்யா ஆகிய இரண்டு பேர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்றுள்ளனர். அபினேஷ் 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப் பந்தயத்திலும், ஜெயசூர்யா 3 ஆயிரம் மீட்டர் ஓட்டப் பந்தயத்திலும் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். இந்நிலையில் பதக்கங்களை வென்று இன்று திருச்சி ரயில் நிலையத்திற்கு வந்த வீரர்கள் இருவருக்கும் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.