திருச்சி என்.ஐ.டி கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல் – விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் – எஸ்.பி பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டம் வாபஸ்!
திருச்சி திருவெறும்பூர் துவாக்குடி அருகே உள்ள தேசிய தொழில்நுட்ப கழகம் மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் தமிழகம் மட்டுமல்லாது நாடு முழுவதும் பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகளும் வெளிநாட்டைச் சேர்ந்த மாணவ மாணவிகளும் தொழிற்கல்வி மற்றும் ஆராய்ச்சி கல்வியை பயின்று வருகின்றனர். அப்படி பயின்று வரும் மாணவ மாணவிகள் கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கியும், வெளியில் அறைகள் எடுத்து தங்கியும் கல்வியை கற்று வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று காலை சுமார் 9:30 அளவில் மாணவிகள் விடுதியில் உள்ள ஒரு மாணவியின் அறைக்கு இன்டர்நெட் பிரச்சனை குறித்து பழுது பார்ப்பதற்காக என் ஐ டி கல்லூரியில் ஒப்பந்த பணியாளராக வேலை பார்ப்பவர் சென்றுள்ளார். அப்பொழுது அந்த அறையில் மாணவி ஒருவர் படித்து முடித்து ஒய்வு எடுத்து கொண்டு இருந்துள்ளார். அப்பொழுது அவரை தனியே பார்த்த அந்த எலக்ட்ரீசியன் அந்த மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றுள்ளார்.
இதனால் அதிர்ந்து போன அந்த மாணவி கூச்சலிட்டு கொண்டு வெளியே ஓடி வந்ததோடு இந்த சம்பவம் குறித்து சக மாணவ மாணவிகளிடம் கூறியுள்ளார். மேலும் தனது பெற்றோருக்கும் தகவல் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் இந்த சம்பவம் குறித்து உடனடியாக திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த எலக்ட்ரீஷனை அதிரடியாக கைது செய்து திருச்சி 6வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த நிலையில் கல்லூரி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கையும் விடுதி வார்டனின் பொறுப்பின்மையையும் கண்டித்து சக மாணவ மாணவிகள் விடுதியின் முன் திரண்டு விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து என் ஐ டி இயக்குனர் இல்லம் நோக்கி வந்து, இயக்குனர் இல்லத்தின் வெளியே அமர்ந்து இயக்குனர் எங்களிடம் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கோரி கோஷமிட்டனர்.
இந்த சம்பவம் குறித்து துவாக்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு ஏ டி எஸ் பி கோபால் மற்றும் முசிறி டிஎஸ்பி சுரேஷ்குமார் தலைமையில் துவாக்குடி போலீசார் விரைந்து சென்று சம்பந்தப்பட்ட மாணவியிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனால் என் ஐடி கல்லூரி வளாகத்திற்குள் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு என் ஐ டி கல்லூரியில் விடுதியில் தங்கி படித்த மாணவி ஒருவர் கல்லூரி விடுதி வார்டனுக்கு தெரியாமல் இரண்டு நாட்களாக வெளியில் சென்று தனது ஆண் நண்பருடன் சுற்றிவிட்டு வந்த பொழுது அந்த மாணவி அப்பகுதியில் சென்ற ஒருவனால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் NIT மாணவ மணவிகள் பெண் காப்பாளர்களை மாற்ற வேண்டும். இதுபோன்று வெளியில் இருந்து பணிக்கு வருபவர்கள் விடுதிக்குள் வரும் பொழுது உடன் இருக்க வேண்டும். மாணவிகள் தனியாக அறையில் இருக்கும் பொழுது இது போன்ற அத்துமீறல்கள் இனி நடக்கக்கூடாது நடந்தால் என்ஐடி நிர்வாகமே பொறுப்பு உள்ளிட்ட 13 கோரிக்கைகளை முன் வைத்து உள்ளனர். மூன்று காப்பாளர்களும் சம்பந்த பட்ட பெண்ணிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இதனை தொடர்ந்து களத்திற்கு வந்த எஸ்.பி. வருண்குமார் போராடும் மாணவர்களிடம் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பாலியல் சீண்டலுக்கு உள்ளான மாணவியிடம் தனி பெண் அதிகாரியை நியமித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். அதோடு, விடுதி வார்டனையும் அழைத்து மாணவர்கள் மத்தியில் மன்னிப்பு கேட்க வைத்தார். இதனால், காவல்துறை மீது நம்பிக்கைக்கொண்டு மாணவர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது.
Comments are closed.