திருச்சி அரசு மருத்துவமனையில் பரபரப்பு: தவறான சிகிச்சையால் நர்சிங் மாணவி பலி? உறவினர்கள், மாணவிகள் விடிய விடிய தர்ணா போராட்டம்!
திருச்சி அரசு மருத்துவமனையில் பரபரப்பு: தவறான சிகிச்சையால் நர்சிங் மாணவி பலி? உறவினர்கள், மாணவிகள் விடிய விடிய தர்ணா போராட்டம்!
திருச்சி:
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு தலைமை மருத்துவமனையில் மூக்கு அறுவை சிகிச்சையின் போது, தவறான சிகிச்சையால் 19 வயது செவிலியர் மாணவி உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உடலைக் வாங்க மறுத்து உறவினர்களும், சக மாணவிகளும் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் மருத்துவமனை வளாகத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
சம்பவத்தின் பின்னணி என்ன?
புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா, மணக்குடிபட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயக் கூலித் தொழிலாளிகளான சேட்டு – கலைச்செல்வி தம்பதியினரின் மகள் சீதாலட்சுமி (19). இவர் திருச்சி அரசு மருத்துவமனையில் மூன்றாம் ஆண்டு செவிலியர் (Nursing) படிப்பு படித்து வந்தார்.
சீதாலட்சுமிக்கு மூக்கில் சதை வளர்ச்சி பாதிப்பு (Nasal Polyp) இருந்துள்ளது. இதற்காக அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். இதனையடுத்து நேற்று அவருக்கு மூக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
உறவினர்களின் குற்றச்சாட்டு: அறுவை சிகிச்சையின் போது மாணவி சீதாலட்சுமிக்கு தேவைக்கு அதிகமான அளவில் மயக்க மருந்து (Anesthesia) கொடுக்கப்பட்டதே அவரது உயிரிழப்பிற்கு முக்கியக் காரணம் என குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.
ஸ்தம்பித்த போக்குவரத்து: சாலை மறியல் போராட்டம்!
மருத்துவர்களின் தவறான சிகிச்சையே உயிரிழப்பிற்கு காரணம் எனக்கூறி, மாணவியின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் சக செவிலிய மாணவிகள் திருச்சி அரசு தலைமை மருத்துவமனை முன்பு திரண்டு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திருச்சி அண்ணா சிலை மற்றும் மருத்துவமனைச் சாலைகளில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டு, பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அமைச்சர்கள், அதிகாரிகள் நேரில் பேச்சுவார்த்தை
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், மாவட்ட ஆட்சியர் சரவணன், துணை சபாநாயகர் ரவிசங்கர் உள்ளிட்டோர் நேரில் வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் மற்றும் பெற்றோரிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.


திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் நேரில் வந்து மாணவி இறப்புக்கான உண்மையான காரணத்தை விளக்கும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என மாணவிகள் உறுதியாக நின்றனர்.
தொடரும் தர்ணா போராட்டம்: நீதி கேட்கும் மாணவிகள்!
அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, தற்காலிகமாக சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இருப்பினும், “உயிரிழந்த மாணவி சீதாலட்சுமியின் மரணத்திற்கு உரிய நீதி வழங்க வேண்டும்;
தவறான சிகிச்சை அளித்த சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் மீது துறை சார்ந்த கடுமையான நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்க மாட்டோம்” எனக் கூறி, மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தின் முன்பு மாணவிகள் தற்போதும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#Trichy #TrichyGH #NursingStudent #MedicalNegligence #Protest #TrichyNews #TamilNaduNews #JusticeForSeethalakshmi





Comments are closed.