திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி செயல்வீரர்கள் கூட்டம், திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தலைமை தாங்கினார். மேலும் இந்த நிகழ்வில் முன்னாள் எம்.பி. திருநாவுக்கரசர், திருச்சி வேலுசாமி, சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன், திருச்சி மாநகர மாவட்ட தலைவர் ரெக்ஸ், தமிழ்நாடு இளைஞர் அணி காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் விச்சு லெனின் பிரசாத் மற்றும் மாவட்ட தலைவர்கள், நகர, பேரூராட்சி, வட்டம், பகுதி, நிர்வாகிகள், தொண்டர்கள் என 500க்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதில் திருச்சி மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரெக்ஸ் பேசுகையில்….
திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கடுமையாக உழைத்து வருகிறார். குறிப்பாக மண்டலம், வார்டு வாரியாக பல்வேறு கூட்டங்கள் நடத்தி கட்சியை வலுபடுத்தியுள்ளனர். ஆகையால் இனிவரும் காலங்களில் நடைபெறும் எந்த தேர்தலாக இருந்தாலும் காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். குறிப்பாக மாநகராட்சி தேர்தலில் திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளில், 35 வார்டுகள் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுக்கு ஒதுக்கீடு செய்து தர மாநில தலைவர் செல்வ பெருந்தகை அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையை முன் வைத்தார்.
பின்னர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை பேசுகையில்….
இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி மாபெரும் வளர்ச்சி அடைந்து வருகிறது. காங்கிரஸ் கட்சியை முற்றிலும் ஓரங்கட்ட வேண்டும் ஒழிக்க வேண்டும் என்று பலர் எண்ணுகிறார்கள், அது ஒருபோதும் நடக்காது. நடந்து முடிந்த தேர்தல்களில் இந்தியா கூட்டணி மக்கள் செல்வாக்கை பெற்று மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. ஆகையால் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை காங்கிரஸ் கட்சியை வெறும் வளர்ச்சி அடையவும் முதன்மை இயக்கமாக மாற்றவும் பல்வேறு கட்ட நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டு வருகிறது.
திருச்சி என்றாலே ஒரு வரலாற்று இடமாகும். அத்தகைய இடத்தில் இருக்கிறோம். மலைக்கோட்டையில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மனது வைத்தால் புனித ஜார்ஜ் கோட்டையை நாம் விரைவில் அடைய முடியும். இத்தகைய சூழ்நிலை விரைவில் நிச்சயம் நடக்கும் அதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
தற்போது பரிணாம வளர்ச்சியை காங்கிரஸ் கட்சி அடைந்துள்ளது. நமது கட்சியில் சிலருக்கு வருத்தம் உள்ளது. ஏனென்றால் புதிய நிர்வாகிகள் சேர்ந்தால் நமது பதவிக்கு ஆபத்து வந்து விடுமோ என்ற எண்ணத்தில் சிலர் செயல்பட்டு வருகிறார்கள். அப்படி யாரும் நினைத்து செயல்படக் கூடாது புதிய நிர்வாகிகளை ஒன்றிணைத்து அரவணைத்து கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.
தற்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் இருக்கக்கூடிய சில கருத்து வேறுபாடுகள் மற்றும் பிரச்சனைகள் குறித்து நடவடிக்கை எடுக்க குழு அமைக்கப்படும். புகார்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.
வரும் அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக மக்கள் பிரச்சனைகளை முன்னெடுப்பதற்காக முதல் கட்டமாக கன்னியாகுமரி முதல் சென்னை வரை நடை பயணம், அதேபோல் நாகப்பட்டினம் முதல் நீலகிரி வரை நடைப்பயணத்தை மேற்கொள்ள உள்ளோம். இந்த நடை பயணத்தில் நமது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொடங்கி வைத்து, கலந்து கொள்ள உள்ளார் என தெரிவித்தார்.