திருச்சியில் உள்ள தனியார் ஹோட்டலில் தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்) டெல்டா மண்டல புதிய மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், துணை அமைப்பு தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்துக்கொண்ட பின்னர், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்…
கர்நாடகாவிற்கு நேரடியாக சென்று தண்ணீர் கேட்டு பெற தமிழக முதல்வர் தவறிவிட்டார். அதனை செய்யாதது விவசாயிகளுக்கு செய்த துரோகம். இதை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. விவசாயிகளுக்கு விதை நெல், உரங்கள், தட்டுப்பாடு இல்லாமல் வழங்க வேண்டும். அதனை மானிய விலையில் கொடுக்க வேண்டும்.
மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கடை மடக்கு சென்றடையும் வகையில் அரசு தண்ணீரை திறக்க வேண்டும். அதிகாரிகளும், பொதுப்பணி துறையினரும் அதனை உறுதிப்படுத்த வேண்டும். தமிழக அரசு வழங்கும் குருவை தொகுப்பு, ஒரு விவசாயிக்கு, ஒரு ஏக்கர் என அறிவித்திருப்பது போதுமானது அல்ல. ஐந்து ஏக்கருக்கு குருவை தொகுப்பு வழங்க வேண்டும். இது விவசாய மக்களின் நியாயமான கோரிக்கை.
சென்ற ஆண்டு மேட்டூரில் தண்ணீர் இல்லாததால், ஆழ்துளை கிணறுகள் இல்லாத விவசாயிகளால் சாகுபடி செய்ய முடியவில்லை.
அந்த விவசாயிகளுக்கு மானியம் வழங்க வேண்டும். வெளிச்சந்தையில் போலி விதை நெல், பூச்சி மருந்து, உரம் போன்றவற்றினால் தமிழக விவசாயிகள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதனை தடுக்க தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும். விவசாயிகள் பிரச்சனையில் தவறு இழைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கையும், தண்டனையும் கிடைக்கச்செய்ய வேண்டும்.
திருச்சி நகரத்தில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழிகள், குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளுக்காக மீண்டும் தோண்டப்பட்டு பளுதடைந்து காணப்படுகிறது. இத்தகைய சாலைகளை மீண்டும் சரியாக, முறையாக புதுப்பிக்க வேண்டும். திருச்சி காந்தி சந்தையை இடமாற்றம் செய்யக்கூடாது. கோட்டை இரயில்வே மேம்பால பணிகள் மந்தமாக நடைபெறுகிறது. அப்பணிகளை உரிய காலத்துக்குள் நிறைவு செய்ய வேண்டும்.
அரியலூர் புறவழிச் சாலை ரவுண்டானா, செந்தூரை சந்திப்பு-கள்ளக்குறிச்சி சந்திப்பு, மாவட்ட ஆட்சியர் அலுவலக சந்திப்பு ஆகிய மூன்று இடங்களிலும் மேம்பாலம் அமைத்து, போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்த வேண்டும். திருமானூர் சுற்றியுள்ள ஒன்றியங்களில் 21 வருவாய் கிராமங்களையும் காவிரி டெல்டா பகுதிகளோடு இணைத்து அப்பகுதி விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கிட வேண்டும்.
அரியலூரில் கொள்ளிடத்தில் குறுக்கே தடுப்பணை அமைத்திட வேண்டும்.
திருச்சி சமயபுரத்தில் பாசன வாய்க்காலில் மருத்துவக் கழிவுகள் கலந்துவருகிறது. இதனால் கால்நடைகள், பொதுமக்கள் பாதிப்படைந்துவருகிறார்கள். அங்கு அரசு முறையான நடவடிக்கை எடுத்து மருத்துவக் கழிவுகள் கலப்பதை தடுக்க வேண்டும்.
வெளி மாநிலங்கள் குவிண்டால் நெல்லுக்கு ரூ3,500 வழங்குகிறது. தமிழக அரசு ரூ2,400 வழங்குகிறது. இதனை அதிகப்படுத்த வேண்டும்.
மக்காச்சோள பயிர் சாகுபடிக்கும் பயிர் காப்பீடு வழங்க வேண்டும்.
தமாகா கட்சியின் மறு சீரமைப்பு பணிகள் சிறப்பாக முடிவடைந்துள்ளது. புதிய நிர்வாகிகள் கூட்டம் தொடர்ந்து கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றுவருகிறது. நேற்று முன்தினம் சென்னை, நேற்று கோவை, இன்று காலை மதுரை, இன்று மாலை திருச்சியில் நடைபெற்றது. வரும் 2026 இல் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான ஆயத்த பணிகளை செய்யும் நோக்கத்தில், கட்சியின் மண்டலம் கூட்டத்தை தாமாக நடத்திவருகிறது.
மறுசீரமைப்பு என்றால் இரண்டு தொகுதிக்கு ஒரு மாவட்ட தலைவர் நியமிக்கப்பட்டு, கட்சியை வலிமைப்படுத்தும் வகையில் அவர்களுடைய பணிகளை கொண்டுசெல்ல இருக்கிறோம்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கவலைக்கிடமாக உள்ளது – சாதாரண மக்களுக்கு எந்த விதமான பாதுகாப்பும் தமிழகத்தில் இல்லை என்ற உணர்வோடு ஒவ்வொரு நிமிடமும் மக்கள் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள்.
அரசியல் கட்சியினுடைய முதல் நிலையில் இருக்கும் தலைவர் முதல் கடைமட்ட பொறுப்பாளர்கள் வரை கொலைகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.
காவல்துறையின் கைகள் ஏன் கட்டப்பட்டுள்ளது. ஏன் தவறு செய்பவர்களை முறையாக தண்டிப்படுவதில்லை.
தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபடும் குற்றவாளிகள் தொடர்ந்து அச்சம் இல்லாமல் செயல்படுகிறார்கள்.
எங்கு பார்த்தாலும் அதிகாரபூர்வமான டாஸ்மாக் கடைகளும், அனுமதி இல்லாத நேரத்திலும் மதுபான விற்பனையும் நடைபெற்றுவருகிறது.
போதைப் பொருள் நடமாட்டத்தை திமுக அரசும், போலீசாரும் தடுக்க தவறிவிட்டனர். கள்ளச்சாராய விற்பனை இவற்றிற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்காமல் சட்டம் ஒழுங்கை சீர்படுத்த இந்த அரசால் முடியாது.
டாஸ்மாக் கடைகளை சரிபாதியாக குறைக்க வேண்டும். போதைப் பொருள் நடமாட்டத்தை அடியோடு ஒழிக்க வேண்டும். தவறு செய்பவர்கள் கடும் தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். காவல்துறையின் கைகள் கட்டப்படக்கூடாது. சட்ட ஒழுங்கு பிரச்சனையை சரி செய்ய முடியாத இந்த அரசு இதை மறைப்பதற்கு மத்திய அரசின் மீது குறை கூற தொடங்கியுள்ளது.
நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் கலந்து கொள்ள வேண்டியது அவரது கடமை. அதில் பங்கேற்காமல் சமூக வலைத்தளங்களிலும், கடிதம் மூலமாகவும் நிதி கேட்பது நியாயமல்ல.
இதற்காகவா மக்கள் வாக்களித்தார்கள். முதல்வர் தனது கடமையை தட்டிக் கழிக்க கூடாது. இதனை வாக்கு வங்கி அரசியலாக மாற்றக்கூடாது. வாக்களித்த மக்களுக்கு பயனுள்ள வகையில் முதல்வர் நடந்துக்கொள்ள வேண்டும்.
விவசாயிகளை பாதுகாப்பதில் தமிழக அரசு தோல்வி அடைந்திருக்கிறது. விவசாயிகளை ஏமாற்றி வருகிறது. கடை மடைக்கு முறையாக தண்ணீர் சேரவில்லை என்று சொன்னால் தூர்வாதது வெட்ட வெளிச்சமாகிவிடும்.
தூர்வாரப்பட வேண்டும் என்பதை எல்லா டெல்டா மாவட்டங்களிலும் விவசாயிகள் தொடர்ந்து கூறிக் கொண்டிருக்கிறார்கள்.
கடைமடைக்கு தண்ணீர் போய் சேர வேண்டும் என்பதை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
வளமான தமிழகம், வலிமையான பாரதம் என்ற ரீதியில் மத்திய அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது. வளமான பாரதம் தேவை என்பது மத்திய அரசின் செயல்பாட்டில் தெளிவு படுகிறது. வலிமையான தமிழகம் தேவை என்றால் பாஜக தலைமையிலான எங்கள் கூட்டணியில் மேலும் கட்சிகள் இணைந்து வலிமையான தமிழகத்தை ஏற்படுத்த தயாராக வேண்டும்.
கடந்த காலங்களில் ஆளும் கட்சிகள் எல்லாம் ஒற்றை இலக்கில் சட்டமன்ற உறுப்பினர்களை பெற்ற காலம் எல்லாம் உண்டு. டெபாசிட் இழந்த காலங்களெல்லாம் உண்டு. காலம் மாறும். மக்கள் மனநிலை மாறும். அதற்கேற்றவாறு மக்கள் எண்ணங்களை பிரதிபலிப்பார்கள்.
மக்களது எண்ணங்களை பிரதிபலிக்க திமுக அரசு தவறிவிட்டது.
மக்கள் விரோத ஆட்சியாக திமுக அரசு செயல்படுகிறது. மக்கள் மீது சுமையை வைக்கும் அரசாக திமுக அரசு செயல் படுகிறது. இது வரும் காலங்களில் தேர்தலில் பிரதிபலிக்கும். வலிமையான இந்தியாவை எங்களுடைய கூட்டணி நடத்திக் கொண்டிருக்கிறது. எங்களுடன் பிற கட்சிகளும் இணைந்து வளமான தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய விருப்பம் என கூறினார்.