திருச்சியில் அதாயி கல்விக் குழுமத்தின் சார்பில் நடைபெற்ற அறநெறி தவறாத அறிவு புரட்சி மாநாடு – மேயர் அன்பழகன் பங்கேற்பு!
அதாயி கல்விக் குழுமத்தின் அங்கமான திருச்சி அதாயி அரபிக் கல்லூரி சார்பில், தமிழ் மண்ணில் முதல் முறையாக ஆலிம் படிப்புடன் முதுகலையில் எம்.பி.ஏ முடித்த உலமாக்கள் நடத்தும் அறநெறி தவறாத அறிவு புரட்சி மாநாடு திருச்சி பால்பண்ணை பகுதியில் நடைபெற்றது.
அதாயி கல்விக் குழுமத்தின் நிறுவனத் தலைவர் AM. முஹம்மது நிஸார் பாஜில் ஜமாலி தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் திருச்சி மாநகராட்சி மேயரும், திமுக மாநகர செயலாளருமான அன்பழகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முதுகலையில் எம்.பி.ஏ முடித்த மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி கவுரவித்தார்.
முன்னதாக நவீன பிரச்சனைகளில் இஸ்லாத்தின் அழகிய தீர்வுகள், வாரிசுரிமையில் இஸ்லாத்தின் பன்முக பார்வை ஆகிய தலைப்புகளில் ஆலிம் படிப்புடன் எம்.பி.ஏ முடித்த பட்ட வகுப்பு உலமாக்கள் சார்பில் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது. தொடர்ந்து முதுகலையில் எம்.பி.ஏ முடித்து இந்த வருடம் பட்டம் பெற உள்ள ஆலிம் பட்டதாரிகளுக்கு நிறைவு விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில் அதாயி அரபிக் கல்லூரியின் முதல்வர் முஹம்மது ஃபைஜுல் ஃபாரி ஃபைஜீ பிலாலி, கல்லூரியின் தலைவர் ராஜ் முஹம்மது ஃபைஜி மற்றும் உலமாக்கள், சமுதாய புரவலர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், பள்ளிவாசல் ஜமாஅத் நிர்வாகிகள், மாணவர்களின் பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.