திருச்சியில் காரை சுற்றி சாலை அமைத்த சம்பவம் – பொதுமக்கள் அதிருப்தி – அமைச்சர் தொகுதியில் அவலம்!
திருச்சி மாநகராட்சி 56-ஆவது வாா்டுக்கு உட்பட்ட கருமண்டபம் இளங்காட்டு மாரியம்மன் கோயில் எதிரே அமைந்துள்ளது திருநகா். இப்பகுதியில் சாலை மோசமானதாக இருந்ததால், புதிதாக தாா் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் ஒரு தெருவில் சாலையோரம் காா்கள் நிறுத்தியிருந்த இடத்தை மட்டும் விட்டுவிட்டு, மற்ற பகுதியில் தாா் சாலை அமைக்கப்பட்டுள்ளது. திமுக அமைச்சா் கே.என் நேருவின் திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் இந்நிகழ்வு நடந்திருப்பது அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இப்பகுதிகளில் இதுபோலவே முழுமையாக சாலைகள் அமைக்காமல் பணிகள் நடைபெற்று வருவதாக அப்பகுதியினா் புகாா் தெரிவித்துள்ளனா். மேலும், திருச்சி மாநகராட்சி மேயா், ஆணையா் ஆகியோா் நேரில் வந்து ஆய்வு செய்து, தரமான சாலையை முழுமையாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.