தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு முன்னதாக ஜி.கே.வாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்…
2026 இல் த.மா.கா குரல் சட்டமன்ற தேர்தலில் ஒலிக்க வேண்டும் என்கிற அடிப்படையில் செயல்பட்டு வருகிறோம். அதற்காக தற்போது உறுப்பினர்கள் சேர்க்கையும் நடைபெற்று வருகிறது.
மது விலக்கு கொள்கையை ஆக்கப்பூர்வமாக அணுக வேண்டும். விசிக மாநாட்டில் அகில இந்திய அளவிலான இண்டியா கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். அவர்கள் மாநிலங்களில் அவர்களின் மதுக் கொள்கை என்ன என்பதை அவர்கள் விளக்க வேண்டும்.
தமிழகத்தில் மதுக்கடைகளை மூடுவதற்கான முழு அதிகாரம் தமிழக அரசிடம் உள்ளது. மத்திய அரசு மது விலக்கு கொள்கையை நிறைவேற்ற வேண்டும் என மாநில அரசு கூறுவது, நாங்கள் மதுக்கடைகளை மூட மாட்டோம் என உறுதி எடுத்ததாகவே தெரிகிறது.
இண்டியா கூட்டணியில் உள்ள அகில இந்திய கட்சி தலைவர்கள், அவர்கள் கட்சி ஆளும் மாநிலங்களில் மது விலக்கு கொள்கையை முன்னெடுக்கட்டும்.
மது கொள்கை மூலம் மக்களை ஏமாற்றுபவர்களை வாக்கு சீட்டு மூலம் மக்கள் ஏமாற்றுவார்கள்.
மீனவர்கள் பிரச்சனை தொடர் பிரச்சனையாக உள்ளது. 160 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் உள்ளனர். அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் எடுக்க வேண்டும். மேலும் இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பணிகளையும் முன்னெடுக்க வேண்டும்.
இலங்கை அரசோடு கண்டிப்போடு பேசி மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும். நாளை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கைக்கு செல்கிறார். அவர் புதிய அதிபரிடம் இந்த விவகாரம் குறித்து பேசி, மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தரப்படும் என நம்புகிறேன்.
தமிழக அரசின் தவறான கல்விக் கொள்கையால் தமிழகத்தில் 30 ஆயிரத்திற்கும் மேல் உள்ள ஆசிரியர்களின் வாழ்வாதாரம் தற்போது கேள்விக்குறியாகி உள்ளது. தமிழக அரசு தன் சொந்த நிதியிலிருந்து ஊதியத்தை வழங்க வேண்டும். புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்கிற தமிழக அரசின் பிடிவாதத்தால் தான் இந்த நிலை, அவர்கள் தங்களின் பிடிவாதத்தை கைவிட வேண்டும்.
இந்த விவகாரத்தில் நான் தமிழக அரசை தான் குற்றம் சாட்ட விரும்புகிறேன். நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை உள்ளிட்டவற்றில் உள்ள நன்மைகள் குறித்து தமிழக அரசுக்கு தெரியவில்லை. இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களுக்கும் ஒரு சட்டம் தமிழகத்திற்கு ஒரு சட்டமா? என கேள்வி எழுப்ப விரும்புகிறேன்.
மத்திய அரசு தமிழகத்திற்கு தரவேண்டிய நிதியை படிபடியாக தர வேண்டும்.
பள்ளி கல்லூரிகளில் அடிக்கடி வெடிகுண்டு வைத்துள்ளதாக சிலர் புரளி பரப்புகிறார்கள். இதனால் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து வருகிறார்கள். எனவே இது போன்ற புரளியை பரப்புபவர்கள் யார் என்பதை கண்டறிந்து அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திமுக அரசு மக்கள் மீது தொடர்ந்து சுமையை ஏற்றும் அரசாக உள்ளது.
இந்த அரசிடம் பேச்சு மட்டும் தான் உள்ளது, செயல்பாடு குறைவாகவே உள்ளது. அமைச்சரவையில் மாற்றம் இருந்தாலும் ஆட்சியாளர்களின் செயல்பாடுகளில் மாற்றம் இருக்காது என மக்கள் எண்ணும் அளவிற்கு தான் இந்த ஆட்சியின் நிலை உள்ளது.
உடல்நிலை சரியில்லாத ரஜினி நலம் பெற வேண்டும் என்று ஒரு அறிக்கை விடுத்தேன். அதன் பிறகு அவரின் உடல்நிலை குறித்து விசாரித்தேன். அவர் நலமுடன் திரும்ப வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். அவர் வீடு திரும்பி, நன்கு ஓய்வெடுத்த பின் நேரில் சந்தித்து நலம் விசாரிக்க இருக்கிறேன்.
தமிழகத்தில் புதிய கட்சி பலர் தொடங்கி இருக்கிறார்கள். கட்சியின் தொடக்கம் ஆரவார தொடக்கமாக தான் இருக்கும். அது தான் த.வெ.க வில் நடக்கிறது. இதைத் தாண்டி வேறு எதுவும் கருத்து கூற விரும்பவில்லை.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் நரேந்திர மோடி தான் அடிக்கல் நாட்டினார். அதை கேமராவில் ரீவைண்ட் செய்து பார்த்தால் கூட தெரிந்து விடும். அடிக்கல் நாட்டப்பட்ட மருத்துவமனை எப்பொழுது திறக்கப்படும் என்பது குறித்து தற்பொழுது கூற முடியாது. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி அதை சிறப்பான முறையில் திறந்து வைப்பார் என தெரிவித்தார்.
Comments are closed.