திருச்சியில் முதுகு தண்டுவடம் பாதிப்படைந்துள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு வசதிகளுடன் கூடிய சிறப்பு சக்கர நாற்காலியை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்!
திருச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு சலுகைகள் மற்றும் அவர்களுக்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு சிரமப்படுபவர்கள் எளிதாக பயன்படுத்தும் வகையில் பல்வேறு சிறப்பம்சங்கள் அடங்கிய சக்கர நாற்காலியை இன்று 14 பேருக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் வழங்கினார். ஒரு லட்சத்து ஐந்தாயிரம் மதிப்புள்ள இந்த சக்கர நாற்காலியில், பேட்டரி இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பேட்டரியை வாகனத்தில் இருந்து தனியாக எடுத்து சார்ஜ் செய்து கொள்ள முடியும். அப்படி சார்ஜ் செய்து கொண்டு சுமார் 30 கிலோமீட்டர் வரை பயணிக்கலாம். மேலும் மாற்றுத்திறனாளிகள் வெளியில் செல்லும் பொழுது வாகனம் போன்று முன்னிருக்கும் அமைப்பை பொருத்திக் கொள்ளவும், வீட்டிற்குள் நுழையும் பொழுது அதனை கழற்றிக் கொள்ளவும் வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் சிறப்பு சக்கர நாற்காலியில் உள்ள சக்கரங்களை தேவைப்படும் பொழுது பொருத்திக் கொள்ளலாம், மற்ற நேரங்களில் சக்கரங்கள் இல்லாமல் நாற்காலி போன்று பயன்படுத்த முடியும். முகப்பு விளக்கு, ஒலி எழுப்பான் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய இந்த சக்கர நாற்காலி, முதுகு தண்டுவட நோயினால் பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகள் தங்களது அன்றாட பணிகளை எவ்வித சிரமமுமின்றி எளிமையாக செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.