திருச்சியில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்!
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் சமூக நலத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதிப்குமார் தொடங்கி வைத்து உரையாற்றி, அங்கு அமைக்கப்பட்டிருந்த சேவை மையங்களை பார்வையிட்டார்.
தொடர்ந்து அவர் பேசுகையில்…
தமிழ்நாடு முதலமைச்சர் அவ உத்தரவின்படி திருநங்கைகளுக்கு முழுமையான சமூக பாதுகாப்பையும், சமூக அங்கீகாரத்தை அளித்து, அவர்களையும் சமூகத்தின் ஓர் அங்கமாக ஏற்றுக் கொள்ளும் பொருட்டு இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு அரசின் மூலம் “தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியம்” 2008 இல் அமைக்கப்பட்டது.
அதன்படி திருநங்கைகளின் கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்வதற்காக திருநங்கைகள் நல வாரியத்தின் மூலம் பல்வேறு நலத்திட்டங்களாக திருநங்கைகளுக்கு குடும்ப அட்டை, சுயதொழில் துவங்க மானிய தொகை, கல்வி உதவி தொகை, சுய உதவி குழு பயிற்சி மற்றும் மானியத் தொகை, முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை, ஆதார் திருத்தம், ஆயுஷ்மான் பாரத் அட்டை இலவச தையல் இயந்திரங்கள் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.
அதனடிப்படையில் அரசுத்துறைகளின் சார்பில் வழங்கப்படும் சேவைகள் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் திருநங்கைகள் எவ்வித சிரமமின்றி சேவைகள் பெற்றிடும் வகையில் இந்த முகாமில் அரசு துறைகள் சார்பிலும் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் சார்பிலும் அரங்குகள் அமைக்கப்பட்டு அவர்களுக்கான சேவை வழங்கப்படவுள்ளது.
சேவையை நீங்கள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும், இம்முகாமிற்கு வராதவர்களுக்கும் தெரியப்படுத்தி அவர்களையும் இது போன்ற முகாம்களில் கலந்து கொண்டு பயனடைய செய்ய வேண்டும் என்பதே இம்முகாமின் நோக்கம் என தெரிவித்தார். இந்திகழ்வில் மாவட்ட சமூக நல அலுவலர் விஜயலட்சுமி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.