ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலை சுற்றி அமைந்துள்ள 21 கோபுரங்களும் பல வண்ணங்களில் காட்சியளிக்க, கிழக்கு கோபுரம் மட்டும் வெள்ளையாக உள்ளது!
திருச்சி ஓர் பார்வை! ஓர் பயணம்!
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலை சுற்றி அமைந்துள்ள 21 கோபுரங்களும் பல வண்ணங்களில் காட்சியளிக்க, கிழக்கு கோபுரம் மட்டும் வெள்ளையாக உள்ளது!
திருச்சி ஓர் பார்வை! ஓர் பயணம்!
திருச்சி வரலாற்று ஆர்வலர் குழு சார்பில் ஸ்ரீரங்கம் வெள்ளை கோபுரம் வரலாறு குறித்து அறிந்து கொள்ள திருச்சி ஓர் பார்வை! ஓர் பயணம்! நிகழ்வினை வரலாற்று ஆர்வலர் குழு நிறுவனத் தலைவர் யோகா ஆசிரியர் விஜயகுமார்,சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர் முகமது சுபேர், வரலாற்று ஆசிரியர் அரிஸ்டோ வசந்தகுமார், சுடுமண் பொருட்கள் சேகரிப்பாளர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் பயணம் மேற்கொண்டனர்.
ஸ்ரீரங்கம் வெள்ளை கோபுரம் குறித்து வரலாற்று ஆர்வலர் குழு தலைவர் விஜயகுமார் பேசுகையில்,ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் 108 வைணவ திவ்யதேசங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் எனச் சிறப்பு பெற்றதும் ஆகும். ஆழ்வார்கள் பதின்மரால் மங்களாசாசனம் செய்யப்பெற்றது. இத்திருத்தலம்.அகண்ட காவிரி ஆற்றுப்படுகை திருவரங்கத் தீவு பகுதியில் ஏழு திருச்சுற்றுகளுடன், உயர்ந்த மதிற்சுவர்களுடன் 156 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. விஜயநகரப் பேரரசு காலத்தில், அதாவது 500 ஆண்டுகளுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டு முற்றுப் பெறாத தெற்கு ராஜகோபுரம், அகோபில மடத்தின் 44-ஆவது ஜீயர் அழகிய சிங்கரின் முயற்சியால் கட்டுமானப் பணி 1979-இல் தொடங்கப்பட்டு, 13 நிலைகளுடனும் 13 கலசங்களுடன் 236 அடி உயரத்தில் ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டு 1987 மார்ச் 23-இல் சம்ப்ரோக்ஷணம் நடைபெற்றது.

தெற்கு ஆசியாவிலேயே மிக உயரமான 236 அடி உயரமுள்ள 13 நிலைகளை கொண்ட இராயகோபுரம் இங்கு அமைந்துள்ளது. திருக்கோயில் மூலஸ்தானத்தில் ஆதிசேஷன் மீது ஸ்ரீரங்கநாதர் சயன திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலை சுற்றி அமைந்துள்ள 21 கோபுரங்களும் பல வண்ணங்களில் காட்சியளிக்க, கிழக்கு கோபுரம் மட்டும் வெள்ளையாக இருக்கும்.
ஸ்ரீரங்கம் கோயிலின் கிழக்கு நுழைவாயிலில் உள்ள வெள்ளை கோபுரம்
நிலைகளின் எண்ணிக்கை ஒன்பது, கலசங்கள் எண்ணிக்கை பதினொன்றாகவும் உள்ளது.
15-ஆம் நூற்றாண்டின்போது, மதுரையை ஆண்ட சுல்தான் படை ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலுக்கு வந்தது. கோவிலில் உள்ள பொன், பொருள்களை கொள்ளையடித்தும் அந்தப் படைத் தளபதிக்கு ஸ்ரீரங்கத்தை விட்டு செல்ல மனமில்லை. கோயிலில் விலைமதிப்பற்ற பொக்கிஷங்கள் ஏராளம் இருக்கும் என்பதால், அவற்றையும் கவர்ந்தே செல்ல வேண்டும் என திட்டமிட்டு, முகாமிட்டார். ஆனால் பொக்கிஷம் சிக்கவில்லை.அந்நியப் படையின் ஆதிக்கத்தால் பக்தர்களும், ஸ்ரீரங்கம் வாசிகளும் மிகுந்த சிரமம் அடைந்தனர். அப்போது கோயிலில் நடனமாடி திருப்பணி செய்து வந்த வெள்ளையம்மாள் என்ற பெண், படைத்தளபதிக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என திட்டமிட்டார். பெண்ணாசை பிடித்த தளபதி வெள்ளையம்மாளிடம் நெருங்கி பழகினார். இதை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட வெள்ளையம்மாள் ஒருநாள் தளபதியிடம் ரகசியமாக, ‘நீங்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் பொக்கிஷத்தை நான் உங்களுக்குக் காட்டுகிறேன்’ என்று , வெள்ளை கோபுரத்தின் உச்சிக்கு அழைத்துச் சென்று தளபதியை மேலிருந்து கீழே தள்ளிவிடவே, தளபதி கீழே விழுந்து இறந்தார். இருப்பினும், ‘படைவீரர்கள் தன்னை சும்மா விடமாட்டார்கள்’ என்று கருதிய வெள்ளையம்மாள் மேலே இருந்து குதித்து, தனது உயிரையும் மாய்த்துகொண்டார்.
அரங்கனின் பொக்கிஷத்தைக் காப்பாற்றுவதற்காக தன்னுயிரை ஈந்த அந்த மங்கையின் நினைவாகவே அந்தக் கோபுரம் இன்றுவரை ‘வெள்ளை கோபுரம்’ என்று அழைக்கப்படுகிறது.விஜயநகரப் படையின் தலைவரான கெம்பண்ணா, முஸ்லிம் படையை விரட்டியடித்து, கிழக்கு கோபுரத்திற்கு வெள்ளை அம்மாள் என்று பெயரிட்டார். இன்றும் கூட இந்தக் கோபுரம் அவரது நினைவாக வெள்ளை வண்ணம் பூசப்பட்டுள்ளது என்றார்.


Comments are closed.