கொடைக்கானலில் மலர் கண்காட்சியுடன் இன்று தொடங்குகிறது கோடை விழா!
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 61 வது மலர் கண்காட்சி இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கும் மலர்கண்காட்சி வருகிற 26 ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. வழக்கமாக மலர் கண்காட்சி இரண்டு நாட்கள் நடத்தப்படும் நிலையில் இந்த முறை 10 நாட்கள் நடைபெறுகிறது. இதன் காரணமாக பூங்காவில் மேரி கோல்ட், லில்லியம், கேலண்டெல்லா, சால்வியா, பேன்சி உள்ளிட்ட லட்சக்கணக்கான மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன. மலர் கண்காட்சியில் 25 ஆயிரம் மலர்கள் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன. அதேபோல் மலர்களைக் கொண்டு நெருப்புக்கோழி, சேவல், மயில், மலர் வீடு, மலர் இதழ்கள் கொண்ட உருவங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மலர் கண்காட்சியை ரசிக்க லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் சுற்றுலா பயணிகளுக்கு குடிநீர், கழிவறை வசதிகளை உரிய முறையில் ஏற்படுத்தி தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.