தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் மாநில மாநாடு திருச்சியில் நடைபெற உள்ளது – மாநில தலைவர் பேட்டி!
தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் மகளிர் அணி/ இளைஞரணி மாநில மாநாடு திருச்சி திருவானைக்காவலில் நாளை (ஞாயிறு) நடைபெறுகிறது. இது குறித்து தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் மாநில தலைவர் நாராயணன் திருச்சி பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில் …
தமிழகத்தில் பிராமணர்களுக்கு எதிராக விஷமப் பிரச்சாரம் செய்யப்பட்டு பிராமணர்கள் காயப்படுத்தப்படுகிறார்கள். இந்த நிலை மாறவேண்டும். தமிழகத்தில் பிராமண சமூகத்தினரின் எண்ணிக்கை 3 சதவீதம் மட்டுமே என தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது,
இது தவறான தகவல். 7 சதவீதமாக இருந்த பிராமணர்களின் எண்ணிக்கை சமீப காலங்களில் 5 சதவீதமாக குறைந்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில் 12 லட்சம் பிராமண குடும்பங்கள் உள்ளது. 45 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
தமிழகத்தின் தலைவிதியை நிர்ணயிக்கும் சக்தியாக பிராமண சமுகம் இருந்தாலும் பிராமண சமூகத்திற்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படுவதில்லை என்பது வேதனைக்குரியது. இந்தியாவில் உயர் பொறுப்பில் உள்ள பிராமணர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் அதே வேளையில், தமிழகத்தில் ஐஏஎஸ் உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் எண்ணிக்கை சொற்பமாகவே உள்ளது.
பிராமண சமூகத்தில், திருமணம் என்பது பெரும் சவாலாக உள்ளது. ஆண் பெண் விகிதத்தில் பெரும் ஏற்றத்தாழ்வு நிலவுகிறது. பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால்
திருமணம் சவாலாகி வருகிறது. எனவே வெளி மாநிலங்களில் உள்ள பிராமண குடும்பங்களோடு திருமண பந்தத்தை ஏற்படுத்த வலியுறுத்தி வருகிறோம் என்றார்.