108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த 12 ஆம் தேதி திருநெடுந்தான்டகம் நிகழ்வுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பகல் பத்து உற்சவத்தின் 10 ஆம் நாளான இன்று நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் சேவை சாதித்தார்.
இதில் சவுரிக் கொண்டை அணிந்து, சூர்ய சந்திர வில்லை, கலிங்கத்துராய் தலை காப்பு, வைர மாட்டல் தோடு, பங்குனி உத்திர பதக்கம், திருமாங்கல்யம், அடுக்கு பதக்கங்கள், பவள மாலை, 6 வட முத்து மாலை, நெல்லிக்காய் மாலை உள்ளிட்ட திரு ஆபரணங்கள் அணிந்து, வெண்பட்டு உடுத்தி அர்ஜூன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வைகுண்ட ஏகாதேசி பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கருதப்படும் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு நாளை காலை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.