சமயபுரம் கோவிலில் முடி எடுக்கும் தொழிலாளர்கள் வேலையை புறக்கணித்து போராட்டம்.
பக்தர்கள் குழந்தைகளுடன் முடி காணிக்கை செலுத்த முடியாமல் சிரமம்
தமிழகம் முழுவதும் உள்ள திருக்கோவில்களில் முடிவெடுக்கும் தொழிலாளர்களை அரசு வஞ்சிக்கிறது.
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு தினமும் தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் தரிசனம் செய்து, தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றிவரும் நிலையில், கோவிலில் முடி எடுக்கும் தொழிலாளர்கள் திடீரென வேலையை நிறுத்திவிட்டு கோவில் நிர்வாகத்தை சந்தித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அதிகாலை முதலே பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்த முடியாமல் குழந்தைகளுடன் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் திருக்கோவில்களில் முடி காணிக்கை செலுத்துவதற்கு கட்டணம் வசூலிப்பது விலக்கிக் கொள்ளப்பட்டது.
முடி காணிக்கை வேண்டுதலை நிறைவேற்ற வரும் பக்தர்களிடம், மொட்டை அடிக்கும் கட்டணம் வசூலிக்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ள போதிலும் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ரூ.100 முதல் ரூ.200 ரூபாய் வரை கட்டாய கட்டணம் வசூலித்துக்கொண்டு தான் மொட்டை அடிக்கின்றனர் என புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில் சமயபுரம் கோவில் இணை ஆணையர் கல்யாணி அதிக கட்டணம் வசூலித்த 7 பேரை தற்காலிக பணி இடை நீக்கம் செய்தார்.இதனை கண்டித்து மொட்டை அடிக்கும் தொழிலாளர்கள் 150 பேர் இன்று காலை முதல் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
முடி கணக்கை செலுத்தும் மண்டபத்திற்கு முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆன்லைன் டோக்கன் வழங்குவதில் முறைகேடுநடைபெறுவதாகவும்,
தங்களுக்கு அரசு பணிக்கான ஊதியம் தங்களுக்கு வழங்கப்படுவதில்லை எனவும், கோவில் சுற்றுப்புறங்களில் சட்டத்திற்கு புறமாக பக்தர்களை கூட்டிச் சென்று சமூக விரோதிகள் முடி எடுத்து விடுகின்றனர், இதனை கண்டித்து கோவில் நிர்வாகத்திடம் புகார் வழங்கியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், இது குறித்து இந்து சமய அறநிலைத்துறை உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை எனவும், தமிழக முழுவதும் உள்ள அறநிலையத்துறைக்குட்பட்ட கோவில்களில் முடி எடுக்கும் தொழிலாளர்களை அரசு வஞ்சிக்கிறது எனவும்
அந்த தொழிலாளர்கள் கூறினர்.
தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட அந்த ஏழு பணியாளர்கள் மீண்டும் பணியில் சேர்க்கப்பட வேண்டும் எனக் கூறி தொடர் போராட்டத்தில். ஈடுபட்டதால் இன்று முடி காணிக்கை செலுத்த வந்த பக்தர்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளானார்கள். நீண்ட நேரம் பேச்சு வார்த்தைக்கு பிறகு முடிவெடுக்கும் தொழிலாளர்கள் அனைவரும் வேலைக்குச் சென்றனர் என்பது குறிப்பிடப்பட்டது.