ரூ.2,500 மளிகை சாமான் இப்போ ரூ.4,000… திருச்சியில் விமன் இந்தியா மூவ்மெண்ட் மாபெரும் ஆர்ப்பாட்டம்!

ரூ.2,500 மளிகை சாமான் இப்போ ரூ.4,000… திருச்சியில் விமன் இந்தியா மூவ்மெண்ட் மாபெரும் ஆர்ப்பாட்டம்!
திருச்சி: அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வைக் கண்டித்து, எஸ்டிபிஐ (SDPI) கட்சியின் மகளிர் அணியான விமன் இந்தியா மூவ்மெண்ட் (WIM) சார்பாக திருச்சி மார்க்கடை எம்ஜிஆர் சிலை அருகே இன்று (நவம்பர் 17) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் விமன் இந்தியா மூவ்மெண்ட் அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் மெகராஜ் பானு கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அத்தியாவசியப் பொருட்களின் விலை சாமானிய மக்களால் வாங்க முடியாத அளவுக்கு விண்ணை முட்டும் வகையில் உயர்ந்துள்ளதாகக் குற்றம் சாட்டினார்.

கடும் விலை உயர்வால் சாமானியர்கள் பாதிப்பு
விலைவாசி உயர்வு குறித்து அவர் மேலும் கூறுகையில், *”கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 2,500 ரூபாய்க்கு வாங்கிய மளிகைப் பொருட்களை, இந்த ஆண்டு நவம்பர் மாதம் 4,000 ரூபாய்க்கு வாங்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. அரிசி கிலோ 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஏழை மக்கள் பயன்படுத்தும் பாமாயில் விலை 20 ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளது.
மேலும், வெங்காயத்தின் விலை 116 சதவீதம் வரை உயர்ந்துள்ளதோடு, இஞ்சி, பூண்டு, தக்காளி மற்றும் ஆவின் பால் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. மக்களின் சம்பளம் மட்டும் உயராத நிலையில், விலைவாசி மட்டும் தொடர்ந்து உயர்த்தப்படுவதால் அடித்தட்டு மக்களே கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். நல்ல அரிசியோ, காய்கறிகளோ வாங்கிச் சாப்பிட முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்”* என வேதனை தெரிவித்தார்.
போராட்டம் வெடிக்கும் என எச்சரிக்கை
மத்திய புள்ளியியல் துறை ஆய்வின் அடிப்படையில் தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும், அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையையும் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். விலைவாசி உயர்வு தொடர்ந்து நீடித்தால், விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பில் இந்தப் போராட்டம் மேலும் தீவிரமடைந்து கடுமையாக வெடிக்கும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டு, விலைவாசி உயர்வுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
#TrichyNews #PriceHike #WomenIndiaMovement #WIM #SDPI #Inflation #TamilNaduNews #Trichy #EssentialCommodities #விலைவாசிஉயர்வு #திருச்சிசெய்திகள் #ஆர்ப்பாட்டம்





Comments are closed.