திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்!
திருச்சி மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் சாலைகளை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகள் அகற்றப்பட்டு வருகிறது. போக்குவரத்திற்க்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படும் வகையில் திருச்சி மாநகராட்சி இடங்களை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளை திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் அகற்றி வருகின்றனர்.





அந்த வகையில் இன்று திருச்சி – புதுக்கோட்டை நெடுஞ்சாலை, சுப்பிரமணியபுரம் பகுதியில் சாலையை ஆக்கிரமித்து செயல்பட்டு வந்த தரைக் கடைகளை திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஜேசிபி இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தினர். இதில் பழக்கடைகள், சாலையோர உணவகங்கள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் அகற்றப்பட்டன. மேலும் சில கடை உரிமையாளர்கள் ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே உடனடியாக அகற்றி கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் எச்சரிக்கையும் செய்தனர்.
ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை தொடர்ந்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். அப்போது மாநகராட்சி அதிகாரிகள் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி கடைகளை அப்புறப்படுத்துவதாக கூறி கடை உரிமையாளர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.




