தேசப்பிதா அண்ணல் காந்தியடிகள் மத வெறியர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட இன்றைய தினம், அனைத்து மாவட்டங்களிலும் மத நல்லிணக்க உறுதிமொழி நிகழ்ச்சி நடத்த வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதனடிப்படையில் திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் டிவிஎஸ் டோல்கேட்டில் உள்ள கலைஞர் கருணாநிதி சிலை முன்பு, தெற்கு மாவட்ட செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் “மத நல்லிணக்க உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் இந்துமத சைவ வைணவ குருக்கள், அர்ச்சகர்கள், கிராம கோவில் பூசாரிகள், இஸ்லாமிய குருமார்கள், கிறிஸ்தவ பாதிரியார்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்றனர். மேலும் இந்நிகழ்வில் மாநகர செயலாளர் மதிவாணன், சேகரன், வண்ணை அரங்கநாதன், செந்தில் மற்றும் மாவட்ட, மாநகர நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் உள்பட பல்வேறு அணிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனர்.