மெட்ரோ திட்டங்களுக்காக பிரதமரை சந்திக்க தயார்-முதல்வர் ஸ்டாலின்.
தமிழகத்தின் வளர்ச்சியே இந்தியாவின் வளர்ச்சி என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மெட்ரோ திட்டங்களுக்காக பிரதமரை சந்திக்க தயார்-முதல்வர் ஸ்டாலின்.
தமிழகத்தின் வளர்ச்சியே இந்தியாவின் வளர்ச்சி என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்திய அளவில் வேகமாக நகரமயமாகி வரும் மாநிலங்களில் தமிழ்நாடும் முக்கிய வரிசையில் இடம் பெற்றுள்ளது. நகர வளர்ச்சியுடன் சேர்ந்து போக்குவரத்து தேவையும் அதிகரித்து வரும் நிலையில் சாலைகள் அகலப்படுத்தப்பட்டு நவீனமாக்கப்பட்டாலும், வாகனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்வதால் போக்குவரத்து நெரிசல் எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை. இதன் காரணமாக பயண நேரம் நீடித்து, எரிபொருள் செலவும், வேலை நேர இழப்பும் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக சென்னை, மதுரை, கோவை, திருச்சி மற்றும் திருப்பூர் போன்ற முக்கிய நகரங்கள் தினமும் கடும் போக்குவரத்து நெரிசல்களை எதிர்கொண்டு வருகின்றன. அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், மாணவர்கள், தினந்தோறும் பயணம் மேற்கொள்ளும் தொழிலாளர்கள் ஆகியோருக்கு இந்த நிலை பெரும் சுமையாக மாறியுள்ளது.
இந்த சூழலைக் கருத்தில் கொண்டு, கோவை மற்றும் மதுரை பெருநகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என திட்டமிடப்பட்டு, அதற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயார் செய்யப்பட்டது.இதற்கு சுமார் 10,740 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டது.இந்த திட்ட அறிக்கைகளை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தமிழ்நாடு அரசு மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்திடம் ஒப்படைத்தது.

அதன் பின்னர் அவை மத்திய அரசின் பரிசீலனையில் இருந்தன. இதற்கிடையில், கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ திட்டத்துக்கான ஆரம்பகட்ட முன்னெடுப்புகளை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கையில் எடுத்ததால், அந்தந்த நகர மக்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்தது. ஆனால், தமிழக அரசின் முன்மொழிவை ஆய்வு செய்த மத்திய அரசு சில திருத்தங்களைக் கோரி திருப்பி அனுப்பியது.அதனைத் திருத்தி மீண்டும் 2024 நவம்பர் மாதத்தில் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இந்த நிலையில், 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு, கோவை நகரின் மக்கள் தொகை 15.84 லட்சமாகவும், மதுரை நகரின் மக்கள் தொகை சுமார் 15 லட்சமாகவும் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.2017 ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட மெட்ரோ ரயில் கொள்கையின் படி, 20 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட நகரங்களிலேயே மெட்ரோ திட்டம் செயல்படுத்தப்படும் என்ற விதி இருப்பதால், கோவை மற்றும் மதுரைக்கான மெட்ரோ ரயில் திட்டங்கள் தற்போது நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் கட்சித்தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
பிரதமர் மோடி உடனான ஒவ்வொரு சந்திப்பிலும் கோவை மற்றும் மதுரைக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை நான் பலமுறை கோரியுள்ளேன். இந்த திட்டங்கள் நிராகரிக்கப்பட்டதால் தமிழக மக்கள் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளனர். இவை நமது மாநிலத்தின் வளர்ச்சிக்கு முக்கியமான உள்கட்டமைப்பு திட்டங்கள்.
தமிழகத்தின் வளர்ச்சியே இந்தியாவின் வளர்ச்சி. அதற்குத் துணை நிற்கவுள்ள மதுரை மற்றும் கோவை மெட்ரோ திட்டத்துக்கு அனுமதி வழங்க பிரதமர் மோடி உடனடியாகத் தலையிட வேண்டும். அதற்காக அவரை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கத் தயாராக உள்ளேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


Comments are closed.