தீபாவளி பண்டிகை வரும் 31 ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில்
பொதுமக்கள், மாணவ மாணவிகள், சிறுவர்கள், வாகன ஓட்டிகள் உள்ளிட்ட அனைவரும் பாதுகாப்பான தீபாவளி பண்டிகையை கொண்டாட வேண்டும் என்பதை வலியுறுத்தி இரு சக்கர வாகன விழிப்புணர்வு பயணம் திருச்சியில் இன்று தொடங்கப்பட்டது. இந்த விழிப்புணர்வு பயணத்தை கடந்த 40 ஆண்டுகளை கடந்து பொதுநல சேவையாளரும், ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியருமான டாக்டர் சீனிவாச பிரசாத் என்பவர் மேற்கொண்டு வருகிறார்.
திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள தீயணைப்பு அலுவலகத்தில் இருந்து இன்று தொடங்கிய இந்த விழிப்புணர்வு இருசக்கர வாகன பயணமானது குளித்தலை, கரூர், வெள்ளக்கோவில், காங்கேயம் வழியாக திருப்பூர் வரை சென்று மீண்டும் அதே வழியாக திருச்சியில் நிறைவடைகிறது.
திருச்சியில் இன்று நடைபெற்ற விழிப்புணர்வு பயண துவக்க நிகழ்விற்கு ஸ்ரீரங்கம் மக்கள் நல சங்கத்தின் தலைவர் மோகன் ராம், ஒயிட் ரோஸ் பொதுநல சங்கத்தின் தலைவர் டாக்டர் சங்கர் ஆகியோர் தலைமை வகித்தனர். நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் குடிமக்கள் நல சங்கத்தின் தலைவர் கோவிந்தராஜ், மூத்த சமூக செயற்பாட்டாளர் கோவிந்தசாமி, அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் யோகா விஜயகுமார், இளையோர் மையத்தின் நிர்வாகியும் கவிஞருமான சங்கமித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட தீ தடுப்பு மீட்பு பணித்துறை நிலைய அலுவலர் சுரேஷ், சிறப்பு நிலைய அலுவலர் முத்துகிருஷ்ணன் மற்றும் தேசிய, மாநில விருது பெற்ற நடிகரும், இயக்குனரும், மாற்றம் அமைப்பின் தலைவருமான ஆர். ஏ. தாமஸ் ஆகியோர் கலந்து கொண்டு தீ தடுப்பு சாலை விபத்து இல்லாத பாதுகாப்பான தீபாவளி இரண்டு சக்கர வாகன விழிப்புணர்வு பிரச்சார பயணத்தை தொடங்கி வைத்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிகழ்வில் திரளான தீயணைப்பு வீரர்கள் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Comments are closed.