பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி பிப்ரவரி மாதம் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரியும் போராட்டம் – தமிழ்நாடு உதவி பெறும் பள்ளிகளின் அலுவலர்கள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்!
தமிழ்நாடு உதவி பெறும் பள்ளிகளின் அலுவலர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி ஜேம்ஸ் பள்ளி வளாகத்தில் இன்று நடைபெற்றது. மாநிலத் தலைவர் ஜான்சன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக தொழிலதிபர்கள் தம்பிதுரை, முருகானந்தம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். முன்னதாக பொதுச் செயலாளர் அருள் டெல்லஸ் வரவேற்று பேசினார். இக்கூட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி மாதம் கருப்பு பேட்ஜ் அணிந்து பணி புரிவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் உதவியாளர் பணியிடத்திற்கான அரசாணை பெறப்பட்டு உள்ளது, அதனை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் புனித ஜேம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் யூஜின், தமிழ்நாடு உதவி பெறும் பள்ளிகளின் அலுவலர் சங்க மாவட்ட தலைவர் அரசகுமார், மாவட்ட பொருளாளர் லியோ லாரன்ஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணை தலைவர் நிக்கோனார் நன்றி கூறினார்.