முசிறி அருகே குத்தகை காலம் முடிந்து செயல்பட்டு வரும் கல் குவாரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொது மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு!
திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள கேணிப்பள்ளம் கிராமத்தை சேர்ந்த சரவணன் மற்றும் ஊர் பொது மக்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் முகாமில் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது….
திருச்சி மாவட்டம் முசிறி சூரம்பட்டி கிராமத்தில் “முசிறி ப்ளூ மெட்டல் & சான்ட்ஸ்” என்ற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான கிரசர் தொழிற்கூடம் அமைந்துள்ளது. மேற்படி கிரசர் தொழிற் கூடத்திற்கு தேவையான கற்கள் அருகில் அமைந்துள்ள ஆரிஃப் ராஜா என்பவருக்கு சொந்தமான கல் குவாரியில் இருந்து தான் எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறிருக்க மேற்படி கல்குவாரியின் குத்தகை உரிமை கடந்த ஆகஸ்ட் மாதவாக்கில் முடிந்து விட்டது. இருப்பினும் மேற்படி கிரசர் தொழிற்கூடம் எந்தவித முடக்கமுமின்றி தொடர்ந்து இயங்கி வருகிறது. அதற்கான கற்கள் அனைத்தும் குவாரியில் சட்டத்திற்கு புறம்பான வகையில் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த வாரம் மேற்படி குவாரியில் தொடர் வெடிச்சத்தம் கேட்டதாலும், இரவு நேரத்தில் வெடிகள் வைத்து பாறைகள் தகர்க்கப்பட்டதாலும் மேற்படி சட்டத்திற்க புறம்பான குவாரி செயல்பாடு குறித்து நானும் எங்கள் ஊர்மக்கள் 50 க்கும் மேற்பட்டோர் முசிறி கோட்டாட்சியர் அவர்களிடம் புகார் மனு அளித்தோம். எங்களது புகாரின் பேரில் முசிறி வருவாய்துறையினர் ஆய்வு செய்து மேற்படி குவாரி செயல்பாட்டினை நிறுத்தினர்.
மேற்படி குவாரியில் அனுமதிக்கப்பட்ட ஆழத்திற்கும் அதிகமாகவும், அனுமதிக்கப்பட்ட பரப்பிற்கும் அதிகமாகவும் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளதால் சுற்றியுள்ள எங்கள் கிணறுகளில் மொத்த தண்ணீரும் பெரும் ஆழத்திற்கு சென்றுவிட்டது. இருப்பினும் மேற்படி கிரசர் தொடர்ந்து குவாரி நிலத்தில் உள்ள கற்களை எடுத்து வருகிறார்கள். அவ்வாறு குவாரி நிலத்தில் இருந்து கற்களை எடுத்து செல்வதற்கு எவ்வித நடைசீட்டும் வழங்கப்படவில்லை. மேலும் மேற்படி கிரசர் தொழிற்கூடத்திற்கு அருகாமையில் எந்தவித குவாரிகளும் நாளது தேதியில் செயல்பாட்டில் இல்லை. அவ்வாறிருக்க தொடந்து சட்டத்திற்கு புறம்பான வகையில் முசிறி வட்டாட்சியர் மற்றும் கிராம நிர்வாக அதிகாரிகளின் முழு ஒத்துழைப்போடு குவாரி செயல்பட்டு வருகிறது.
மேற்படி குவாரிக்கு வழங்கப்பட்ட பெர்மிட் மற்றும் மேற்படி கிரசர் தொழிற்கூடம் இயங்கி வருவது குறித்தும் குறிப்பாக குவாரியை அளவீடு செய்தும் தொழிற்கூடத்தின் உற்பத்தி மற்றும் குவாரியில் வழங்கப்பட்ட Transit Pass போன்ற ஆவணங்களை ஆய்வு செய்யவும் வேண்டுகிறோம். மேலும் மேற்படி நிறுவனத்தால் தமிழக அரசிற்கு ஏற்பட்ட வருமான இழப்பு மற்றும் சுற்றுச்சூழல் இழப்பினை ஈடுசெய்யவும், மேலும் முறைகேட்டிற்கும் அரசின் வருமான இழப்பிற்கும் காரணமான நிறுவனம் மற்றும் அதற்கு துணைபோன வருவாய் துறை அதிகாரிகள் மீதும் துறைரீதியிலான மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.