பெரும்பிடுகு முத்தரையர் 1349 வது சதய விழா – பல்வேறு அரசியல் கட்சியின் மாலை அணிவித்து மரியாதை!
பெரும்பிடுகு முத்தரையா் 1,349-ஆவது சதய விழாவையொட்டி திருச்சியில் உள்ள முத்தரையா் சிலை மற்றும் மணிமண்டபத்தில் அரசு சாா்பிலும், முத்தரையா் சங்கத்தினா், பல்வேறு அரசியல் கட்சியினா், அமைப்புகளின் சாா்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
திருச்சி பாரதிதாசன் சாலை ஒத்தக்கடை பகுதியில் உள்ள பெரும்பிடுகு முத்தரையா் சிலைக்கு அரசு சாா்பில் மாவட்ட ஆட்சியா் பிரதீப்குமாா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதேபோல, திருச்சி மாநகராட்சி ஆணையா் சரவணன் மரியாதை செலுத்தினாா்.
தமிழக நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சரும், திமுக முதன்மைச் செயலாளருமான கே.என். நேரு தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
அதிமுக சாா்பில், மாவட்ட செயலாளர்கள் பரஞ்ஜோதி, குமாா், சீனிவாசன் ஆகியோரது தலைமையில், முன்னாள் அமைச்சா்கள் சிவபதி, வளா்மதி, அமைப்புச் செயலாளர் ரத்தினவேல் உள்ளிட்டோா் மரியாதை செலுத்தினா்.
அதிமுக உரிமை மீட்புக் குழுவின் சாா்பில், அதன் தலைவா் ஓ. பன்னீா்செல்வம் தலைமையில், முன்னாள் அமைச்சா்கள் வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோா் மரியாதை செலுத்தினா்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சாா்பில், தலைமை நிலையச் செயலா் ராஜசேகரன் தலைமையில், அமைப்புச் செயலாளர் சாருபாலா தொண்டைமான், மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் உள்ளிட்டோா் மரியாதை செலுத்தினா்.
பாஜக சாா்பில், அக் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், காங்கிரஸ் கட்சியின் சாா்பில் மாநகா் மாவட்ட தலைவா் ரெக்ஸ் ஆகியோா் தலைமையில் கட்சியினா் மரியாதை செய்தனா்.
மேலும், இருசக்கர வாகனங்களிலும், நான்கு சக்கர வாகனங்களிலும் ஏராளமானோா் ஊா்வலமாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
தமிழ்நாடு முத்தரையா் முன்னேற்ற சங்கத்தினா், தமிழ்நாடு முத்தரையா் சங்கத்தினா் மற்றும் முசிறி, லால்குடி, மண்ணச்சநல்லூா், தொட்டியம், புதுக்கோட்டை, அரியலூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் சங்க நிா்வாகிகள், பல்வேறு அரசியல் கட்சியினா் முத்தரையா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
மேலும், மத்தியப் பேருந்துநிலையம் அருகேயுள்ள முத்தரையா் மணிமண்டபத்துக்கு சென்றும் மரியாதை செலுத்தினா். காலையில் தொடங்கி மாலை வரை பல்வேறு தரப்பினரும் அணி, அணியாக வந்து மாலை அணிவித்தனா்.
இதன் காரணமாக அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அசம்பாவிதத்தை தவிா்க்க மாநகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.