மகளிர் தினத்தை முன்னிட்டு ஜோசப் கண் மருத்துவமனை சார்பில் “பெண்மையின் நலம்” எனும் நிகழ்ச்சி திருச்சி காவேரி கல்லூரியில் நடைபெற்றது!
உலக மகளிர் தின விழாவை முன்னிட்டு ரோட்டரி கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி பட்டர்பிளை, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் என்.எஸ்.எஸ் குழு, காவேரி மகளிர் கல்லூரியின் என்.எஸ்.எஸ் அமைப்பு மற்றும் திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை ஆகியோர் இணைந்து நடத்திய “பெண்மையின் நலம்” என்னும் நிகழ்ச்சி திருச்சி காவேரி மகளிர் கல்லூரி கூட்டரங்கில் இன்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் சுஜாதா தலைமை தாங்கினார். இவ்விழாவில் ரோட்டரி மாவட்டம் 3000 ஆளுநர் ஆனந்த ஜோதி தலைமை விருந்தினராக கலந்து கொண்டு விழா பேருரை ஆற்றினார். அதனைத் தொடர்ந்து பாரதிதாசன் பல்கலைக்கழக என்.எஸ்.எஸ் குழு ஒருங்கிணைப்பாளர் லட்சுமி பிரபா கௌரவ விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
முன்னதாக டாக்டர் பத்மா ரித்தா பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் பல்வேறு இடர்பாடுகளில் இருந்து எவ்வாறு தங்களை பாதுகாத்துக் கொள்வது என்று சிறப்பு உரையாற்றினார். அதேபோல் டாக்டர் கீதா பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பபை வாயில் ஏற்படும் புற்றுநோய் குறித்து விளக்கி பேசினார். தொடர்ந்து டாக்டர் சசி, சரும பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்து மாணவிகளிடம் விளக்கி கூறினார். டாக்டர் பாரதி பாரம்பரிய உணவு வகைகளையும் அதன் பயன்பாடுகளையும் மாணவிகளிடம் எடுத்துரைத்தார்.
இந்நிகழ்ச்சியை திருச்சி ஜோசப் கண் மருத்துவமனையின் நிர்வாகியும், ரோட்டரி கிளப் ஆப் பட்டர்ஃபிளை சங்கத்தின் தலைவருமான சுபா பிரபு ஒருங்கிணைத்து நிகழ்ச்சியை நடத்தினார். நிகழ்ச்சியின் இறுதியாக ரோட்டரி கிளப் ஆப் திருச்சி பட்டர்பிளை சங்க செயலாளர் நன்றி கூறினார். இந்நிகழ்வில் காவிரி மகளிர் கல்லூரி என்.எஸ்.எஸ் திட்ட அலுவலர் முனைவர் நீலா உள்பட கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.