இந்தி திணிப்பை எதிர்த்தும், தமிழ் மொழியை காப்பதற்காகவும் கடந்த 1965–ம் ஆண்டில் நடந்த போராட்டத்தின் போது ஏராளமானவர்கள் உயிர் இழந்தனர். தமிழ் மொழிக்காக தீக்குளித்து இறந்த கீழப்பழூர் சின்னசாமி, விராலிமலை சண்முகம் ஆகியோரின் நினைவிடங்கள் திருச்சி தென்னூர் அண்ணாநகர் பகுதியில் உள்ளன. இந்த நினைவிடங்களில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 25 ஆம் தேதியில் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாளாக பல்வேறு அரசியல் கட்சிகள் அனுசரித்து வருகின்றன.
இந்நிலையில் இன்று மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளை முன்னிட்டு அதிமுக ஓபீஎஸ் அணி சார்பில், அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் தலைமையில் திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள எம்.ஜி.ஆர் சிலையில் இருந்து அமைதி ஊர்வலமானது புறப்பட்டது. இந்த அமைதி ஊர்வலம் உழவர் சந்தை வழியாக தென்னூர் அண்ணாநகர் பகுதியில் உள்ள மொழிப்போர் தியாகிகளின் நினைவிடத்தை அடைந்ததும் அங்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடர்ந்து வீரமரணமடைந்த மொழிப்போர் தியாகிகளுக்கு ஆதரவாக வீரவணக்கம் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் துணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான கு.ப.கிருஷ்ணன், மாவட்ட செயலாளர்கள் ராஜ் மோகன், சாமிக்கண்ணு, ரத்தினவேல், அவை தலைவர் வக்கீல் ராஜ்குமார், ஜெ.பேரவை மாவட்ட செயலாளர் வெல்லமண்டி ஜவஹர்லால் நேரு உள்பட மாநில, மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.