பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர் கூட்டு நடவடிக்கை குழுவினர் தர்ணா போராட்டம்!
காலிப் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு பொது சுகாதாரத்துறை, கிராமப் பகுதி சமுதாய சுகாதார செவிலியா் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தர்ணா போராட்டம் நடைபெற்றது.
செவிலியா்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் காயத்ரிதேவி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் செயல் தலைவா் கோமதி, துணைத் தலைவா் விமலாதேவி உள்ளிட்டோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.
இதில் துணை சுகாதார நிலையம், ஆரம்ப சுகாதார நிலையங்களில் துணை செவிலியா் பயிற்சி நிறைவு செய்தவா்களை, காலியாக உள்ள செவிலியா் பணியிடங்களில் பணி அமா்த்த வேண்டும்.
மக்கள் தொகைக்கு ஏற்ப புதிதாக உருவாக்கப்பட்டுள்ள துணை சுகாதார நிலையங்களில் எம்.எல்.எச்.பி. செவிலியா்களை பணியமர்த்தும் கருத்துருவை கைவிட்டு, கிராம சுகாதார செவிலியரை பணி நியமனம் செய்ய வேண்டும்.
களப்பணிகளை ஆய்வு செய்து அறிக்கை சமா்ப்பிக்க சமுதாய சுகாதார செவிலியருக்கு கணினி வழங்க வேண்டும். கிராமப் பகுதி சமுதாய சுகாதார செவிலியருக்கு ஆரம்ப சுகாதார நிலையம், மாவட்ட சுகாதார அலுவலகங்களில் தனி அறை ஒதுக்கீடு செய்து தர வேண்டும்.
அறிக்கைகள் கொடுக்க கால அவகாசம் கொடுக்க வேண்டும். திறனாய்வின்போது ஒருமையில் பேசுவது மற்றும் பண்பாட்டு வித்தைகள் பயன்படுத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இதில் திருச்சி மாவட்டம் முழுவதும் பணிபுரியும் கிராமப்புற சுகாதார செவிலியா்கள், சங்க நிா்வாகிகள், கூட்டு நடவடிக்கை குழுவினா் என 200-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.