இந்தியாவின் வளர்ச்சிக்காகவும், பாதுகாப்பிற்காகவும் மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் – திருச்சியில் டிடிவி தினகரன் பேச்சு!
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து, திருச்சி காட்டூர் பகுதியில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில்…
இந்தியா கூட்டணியில் யார் பிரதமர் என்று தெரியவில்லை. ஆனால் நமது கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் மோடி தான் என்பது அனைவருக்குமே தெரிந்தது. தமிழகத்தில் திமுகவும், அதிமுகவும் கள்ளக் கூட்டணி வைத்துள்ளது.
திமுக பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு இப்போது ஒன்று கூட நிறைவேற்றாமல் வாக்கு கேட்கும் இடத்தில் என்ன செய்வது என தெரியாமல் தத்தளித்து வருகிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துள்ளது.
10 ஆண்டுகளாக ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்பாமல் அப்படியே உள்ளதால் தற்பொழுது தேர்வு எழுதியவர்கள் அதற்காக போராடி வருகின்றனர். திமுக ஆட்சிக்கு வரும் பொழுது தமிழகத்தில் ஒரு சொட்டு மதுபானம் இல்லாமல் செய்து விடுவோம் என்று சொன்னார்கள், ஆனால் தற்போது அதை நிறைவேற்றவில்லை.
மாறாக தமிழ்நாடு போதை பொருள் சந்தை மாநிலமாக விளங்கி வருகிறது. இந்தியாவின் வளர்ச்சிக்காகவும், பாதுகாப்பிற்காகவும், தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும் மோடிக்கு வாக்களித்து அவரை மீண்டும் பிரதமராக்க வேண்டும்.
அதேபோல் திருச்சி தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் செந்தில் நாதனுக்கு குக்கர் சின்னத்தில் வாக்களித்து அவரை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.