பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம்!
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், கள்ளச்சாராயம் ஒழிப்பில் கடமை தவறிய அதிகாரிகளை தண்டிக்க வேண்டும், கஞ்சா வியாபாரிகளை இரும்பு கரம் கொண்டு அடக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் ஜூலை 2 ஆம் தேதி தமிழகத்தில் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா அறிவித்திருந்தார்.
அதன் அடிப்படையில் மனிதநேய மக்கள் கட்சியின் திருச்சி மாவட்டம் சார்பில், திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே பெரியார் சிலை முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டதிற்கு மாவட்ட தலைவரும், கவுன்சிலருமான பைஸ் அகமது தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட தலைவர் முகமது ராஜா வரவேற்புரையாற்றினார். மமக மாவட்ட செயலாளர்கள் இப்ராஹிம், அஷ்ரஃப் அலி, தமுமுக மாவட்ட செயலாளர்கள் இப்ராஹிம்ஷா, இலியாஸ் மற்றும் கிழக்கு மாவட்ட பொருளாளர் காஜா மைதீன், ஐ.டி விங் மாநில துணை செயலாளர் நஜீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக மமக தலைமை நிலைய செயலாளர், வழக்கறிஞர் ஜெய்னுல் ஆபிதீன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். தொடர்ந்து மக்கள் கலை இலக்கியக் கழக பொது செயலாளர் கோவன் குழுவினர் மது போதைக்கு எதிரான பாடல்களை பாடினர். இறுதியாக மேற்கு மாவட்ட பொருளாளர் ஹுமாயூன் கபீர் நன்றி உரையாற்றினார். மேலும் இந்த ஆர்பாட்டத்தில் மமக மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் உள்பட 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.