திருச்சியில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை – பல்வேறு பகுதிகளை சூழ்ந்த மழைநீர் – அமைச்சர் நேரு ஆய்வு!
திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக கன மழை பெய்து வருகிறது. திருச்சி மாநகரில் ஜங்ஷன், விமான நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் 5 சென்டிமீட்டருக்கு மேல் மழை பதிவானது. இந்த நிலையில் திருச்சி அகில இந்திய வானொலி நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்கள் குடியிருப்பு மாநகராட்சி அலுவலகம் பின்புறம் உள்ளது. இந்த குடியிருப்பில் 25க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இதில் தரைதளத்தில் உள்ள வீடுகளில் மழை நீர் புகுந்துள்ளது. இருசக்கர வாகனங்கள் மழை நீரில் நிற்கின்றன. சிலர் வீடுகளை பூட்டிவிட்டு வெளியே சென்று உள்ளனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் உள்ளே மழை நீர் வடியாமல் வீடுகளுக்குள் கூடுதலாக போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் கடந்த 24 மணி நேரமாக விடாது பெய்த மழை காரணமாக திருச்சி விமான நிலையத்தின் ஓடுபாதையில் இருந்து அதிக அளவு தண்ணீர் வெளியேறியதால் 46 வது வார்டு பகுதியில் உள்ள பரக்குளம் ஒரே நாளில் நிரம்பியது. இந்த குளத்திற்கு சரியான வடிகால் வசதி இல்லாததால் உபரி நீர் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்து வருகிறது.
இந்த நிலையில் மண்ணச்சநல்லூர் தொகுதியில் பல்வேறு இடங்களில் நேற்று மாலை முதலே பலத்த மழை பெய்ததால் நீர்நிலைகள், வடிகால் வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பு காரணமாக நீர் வடியாமல் வயல்களில் புகுந்து மூழ்கியுள்ளது. மேலும் விளைந்த நெற்பயிர்கள் மழையின் காரணமாக சாய்ந்து உள்ளது. சம்பா சாகுபடிக்கு இதுவரை 35 முதல் 40 ஆயிரம் ரூபாய்கள் செலவு செய்து உள்ளோம். வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரப்படுவதால் விவசாய நிலங்களில் நீர் புகுந்து பயிர் சேதமடைந்துள்ளதாகவும், இதனால் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பாக திருச்சி மாநகர் பகுதியில் உள்ள கிராப்பட்டி அன்பு நகர், அருணாச்சலம் நகர், கிருஷ்ணமூர்த்தி நகர், சக்தி விநாயகர் கோயில் தெரு, டி.எஸ் நகர், உறையூர், லிங்கா நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. இந்த தகவல் அறிந்த நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, அந்த பகுதிகளில் இன்று நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து திருச்சி மாநகரில் பல்வேறு பகுதிகளை பார்வையிட்ட அவர் உடனடியாக மழைநீர் வெளியேற்றுவதற்கான பணிகளை மேற்கொள்ளூமாறு மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் சரவணன், நகர பொறியாளர் சிவபாதம், மாமன்ற உறுப்பினர்கள் கவிதா செல்வம், முத்து செல்வம், உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Comments are closed.