காவேரி கூக்குரல் சார்பில் திருச்சியில் 4.5 லட்சம் மரங்கள் நட திட்டம் – அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்!
ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருச்சியில் இந்தாண்டு நான்கரை லட்சம் மரங்கள் விவசாய நிலங்களில் நடப்பட உள்ளது. இதன் தொடக்க விழா திருச்சி தில்லை நகரில் உள்ள ஈஷா யோக மையத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்நாடு நகர்ப்புற நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என். நேரு சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
அவர் விவசாயிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கி இந்நிகழ்வை தொடங்கி வைத்தார். இவ்விழாவில் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அமைச்சர் கே.என். நேரு விழாவில் பேசுகையில்,..
20 ஆண்டுகளுக்கு முன்பு ஈஷா நிறுவனர் சத்குரு அவர்களுடன் சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த மரம் நடும் விழாவில் அப்போதைய முதல்வர் மாண்புமிகு கலைஞர் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று ஈஷாவின் மரம் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அந்த விழாவில் கலைஞர் பேசும் போது, நாம் மரத்தை வளத்தால் மரம் நம்மை வளர்க்கும் என்று ஒரு அற்புதமான வாசகத்தை சொன்னார். அந்த வாசகத்துடன் கலைஞர் அவர்கள் தொடங்கி வைத்த ஈஷாவின் மரம் நடும் திட்டத்தின் மூலம் இதுவரை 10.9 கோடி மரங்கள் நடப்பட்டு இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ஈஷாவின் மரம் நடும் பணிகள் மேன்மேலும் சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். விவசாயிகள் மர வேலைப்பாடுகளுக்கு தேவைகளுக்கான மரங்கள் மட்டும் இன்றி பழ வகை மரங்களை அதிகம் நட வேண்டும். அவகோடா போன்ற பழ மரங்கள் விவசாயிகளுக்கு பெரும் வருவாயை தருகிறது. பழ மரங்கள் நடுவதன் மூலம் உணவு உற்பத்தியையும் அதிகரிக்கும். தமிழ்நாடு முழுவதும் வேலை ஆட்கள் இன்றி தரிசாக மாறி வரும் விவசாய நிலங்களில் எல்லாம் மரங்கள் நட வேண்டும். மரங்கள் நடுவது நாட்டுக்கும், மக்களுக்கும், விவசாயிகளுக்கும் நல்லது. மரம் நடும் பணியோடு மட்டுமின்றி ஏரிகளை தூர்வாரி அதை செப்பனிடும் பணியிலும் ஈஷா இயக்கம் தமிழக அரசுடன் இணைந்து செயலாற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுகிறேன். இந்த அற்புதமான நிகழ்ச்சியில் பங்கேற்றதில் மிக்க மகிழ்ச்சி என தெரிவித்தார்.