திருச்சியில் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா விளையாட்டு போட்டிகள் தொடக்கம்!
முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில், திருச்சி மாவட்ட இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அலுவலகம் மூலம் பள்ளி, கல்லூரி மாணவா், மாணவிகள், இளைஞா்கள் பங்கேற்கும் விளையாட்டுப் போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி கபடி, கால்பந்து, கைப்பந்து மற்றும் தடகளப் போட்டிகள் அண்ணா விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது. இதில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். இப்போட்டிகளில், திருச்சி மாவட்ட விளையாட்டு விடுதிகளில் பயிலும் மாணவா், மாணவிகள், கல்லூரி மாணவா்கள், விளையாட்டு பயிற்றுநா்கள் என 500-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த போட்டிகளில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் வீரா்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும். அணிகளுக்கும், தனி நபா்களுக்குமான கோப்பைகள் வழங்கப்படும். போட்டிகளில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும். இன்று மாலை பரிசு பெறுவோா் குறித்த விவரங்கள் அறிவிக்கப்படும். தொடக்க விழா நிகழ்வில், மாவட்ட விளையாட்டு அலுவலா் வேல்முருகன் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.