மது, போதை, ஆபாசம், ஒழுக்க கேடுகளில் இருந்து மக்களை காப்பதற்காக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணி சார்பில் “ஒழுக்கமே சுதந்திரம்” என்ற மையக்கருத்திலான மாபெரும் அரங்கக் கூட்டம் திருச்சி மேலப்புலிவார் ரோட்டில் உள்ள தேவர் ஹாலில் நடைபெற்றது.
ஒழுக்கமே சுதந்திரம் தேசிய பரப்புரையின் மாநில ஒருங்கிணைப்பாளர் மும்தாஜ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முனைவர் கா.தாமரைச்செல்வி, வழக்கறிஞர் ரீத்தா சூசை மற்றும் சமரசம் இதழ் பொறுப்பாசிரியர் வி.எஸ்.முஹம்மது அமீன் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினர்.
இதில் வி.எஸ்.முஹம்மது அமீன் பேசுகையில்,..
“நாகரிகம் உச்சம் தொட்டு நிற்கும் இக்காலத்தில் ஒழுக்கம் அதலபாதாளத்தில் வீழ்ந்து கிடக்கிறது. இந்த ஒழுக்க வீழ்ச்சி நாட்டையே நாசப்படுத்திவிடும். இஸ்லாம் முழு மனித குலத்தையும் நோக்கி ஒழுக்க வாழ்வுக்குத் திரும்பும்படி அழைப்பு விடுக்கிறது. ஒவ்வொரு முஸ்லிமுக்கும் ஒழுக்கப் பயிற்சியை வழங்குகிறது. ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கடந்த 75 ஆண்டுகளாக அகில இந்தியா முழுவதும் பல்வேறு களங்களிலும், தளங்களிலும் பணியாற்றி வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஒழுக்கமே சுதந்திரம் எனும் கருப்பொருளில் ஒருமாத பரப்புரையை முன்னெடுத்து அதன் நிறைவுப் பகுதியை எட்டியுள்ளது.
ஒழுக்க மாண்புள்ள தலைமுறை உருவாக்க அனைவரும் முன்வர வேண்டும். மது, போதை, சூது, ஆபாசம், தவறான உறவுகள் போன்ற ஒழுக்கக்கேடான பெருந்தீமைகளை அகற்ற அரசும் முன்வர வேண்டும். கல்வி வளாகங்களில் ஒழுக்கச்சூழலை உருவாக்க வேண்டும். கூல்லிப் போன்ற போதைப் பொருள்களை அரசு தடை செய்ய வேண்டும். ஆபாச வலைதளங்கள் மட்டுறுத்தப்பட வேண்டும். ஆன்லைன் ரம்மி போன்ற இணைய சூதாட்டத்தை ஒழிக்க ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும். அனைத்துத் தீமைகளுக்கும் தாயான மதுவை முழு முற்றாக ஒழித்து தமிழ்நாட்டை மது இல்லா மாநிலமாக மாற்ற வேண்டும். மதுவை ஒழிக்காமல் போதை இல்லாப் பாதை சாத்தியமில்லை என்பதை அரசு உணர வேண்டும்” என குறிப்பிட்டார்.
மேலும் இந்நிகழ்வில் மக்கள் தொடர்பு செயலாளர் ஐ.நவாஸ்கான், அரசியல் பிரமுகர்கள், நகர முக்கியஸ்தர்கள், அரசு சார அமைப்புகள், பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள், இளைஞர்கள், மற்றும் அனைத்து சமூக நண்பர்கள் என 750-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Comments are closed.