மின்வாரியத்தை ஊழல் வாரியமாக மாற்றியது தான் தி.மு.க. அரசின் சாதனையா ?
மின்வாரியத்தை ஊழல் வாரியமாக மாற்றியது தான் தி.மு.க. அரசின் சாதனையா ?
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு 2021-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை மின்சார வாரியத்திற்கு 45 ஆயிரத்து 800 மின்மாற்றிகள் ரூ.1182 கோடிக்கு வாங்கப்பட்டன. ஒவ்வொரு மின்மாற்றியும் 50 சதவீதம் வரை கூடுதல் விலை கொடுத்து வாங்கப்பட்டதில் மின்வாரியத்திற்கு ரூ.387 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து உயர்நீதிமன்றக் கண்காணிப்பில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக காவல்துறையின் கையூட்டுத் தடுப்புப் பிரிவிடம் அறப்போர் இயக்கம் 2023-ம் ஆண்டு ஜூலை 6-ந்தேதி புகார் அளித்தது.

இந்த ஊழல் குறித்து சிபிஐ விசாரணைக்கு ஆணையிடக் கோரி கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந்தேதி அறிக்கை வெளியிட்டிருந்தேன். ஆனால் அவற்றின் மீது எந்த நடவடிக்கையையும் தி.மு.க. அரசு மேற்கொள்ளவில்லை.
இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் கடந்த நவம்பர் 7-ந்தேதி விசாரணைக்கு வந்தபோது, இதே கோரிக்கையுடன் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருப்பதைக் காரணம் காட்டி, மின்மாற்றி கொள்முதல் ஊழல் குறித்து வழக்குப்பதிவு செய்வதை தி.மு.க. அரசு திட்டமிட்டு தாமதித்து வருகிறது.
மின்மாற்றி ஊழல், மின்சாரக் கொள்முதல் ஊழல், ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல் பேரம் என மின்வாரியத்தை ஊழல் வாரியமாக மாற்றியது தான் தி.மு.க. அரசின் சாதனையாகும்.
மின்மாற்றிக் கொள்முதலில் தொடர்புடைய எதிரிகள் மீது வழக்கு தொடர்வதற்கு பதிலாக அவர்களுக்கு சன்மானம் வழங்கும் தி.மு.க. ஆட்சியில், இந்த ஊழல் வழக்கில் நீதி கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.
எனவே, மின்மாற்றி கொள்முதலில் நடைபெற்ற ஊழல்கள், கூட்டுச் சதிகள் ஆகியவற்றை வெளிக்கொண்டு வந்து,சம்பந்தப்பட்டவர்களை தண்டிக்கும் வகையில், இதுதொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Comments are closed.