இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் சிறப்பு பொது குழு கூட்டம் இன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தேசியத் தலைவர் காதர்மொய்தீன் தலைமையில் நடைபெற்றது. இதில் ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நவாஸ் கனி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. அவருக்கு கட்சியினர் மாலை அணிவித்தும், பொன்னாடை போர்த்தியும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இவர் தற்போது ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார்.
இந்த கூட்டத்திற்கு தமிழகம் முழுவதும் உள்ள நிர்வாகிகள் 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தேசிய தலைவர் காதர்மொய்தீன்….
இன்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் மீண்டும் ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியை ஒதுக்கி கொடுத்த திமுக தலைமைக்கும், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
மத்தியில் ஆளக்கூடிய பா.ஜ.க அரசு இந்திய மக்களை மத அடிப்படையில் பிரித்து, வேறுபடுத்தி ஜனநாயக வழிமுறைகளையும், இந்திய அரசமைப்பின் சாசனத்தையும், 75 ஆண்டு கால நடைமுறைகள் எல்லாவற்றையும் சிதைத்து அராஜக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த ஆட்சியை முடிவு கட்டக் கூடிய வகையில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற தமிழகத்தில் உள்ள அத்தனை கட்சிகளும் பாடுபட வேண்டும் என தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் தொகுதியில் தொடர்ந்து பணியாற்றிய நவாஸ் கனியை மீண்டும் அந்தத் தொகுதி வேட்பாளராக இந்த கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ள கூட்டணி தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் இந்தியா கூட்டணி பெரும் வெற்றி பெறும். ஆட்சி மாற்றத்தை நிச்சயம் உருவாக்கும் என்ற சந்தேகம் இல்லை என தெரிவித்தார்.