குளித்தலை சட்டமன்ற தொகுதி தோகைமலை பகுதியில் ஐ.ஜே.கே வேட்பாளர் பாரிவேந்தர் வாக்கு சேகரிப்பு!
நடைபெற உள்ள மக்களவை தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் ஐ.ஜே.கே வேட்பாளர் பாரிவேந்தர் போட்டியிடுகிறார். இவர் தொகுதி முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தோகைமலை பகுதியில் நேற்று பொது மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதில் தோகைமலை, ராச்சாண்டார் திருமலை, காவல்காரன்பட்டி, கல்லடை பகுதிகளில் வாக்காளர்களிடம் துண்டு பிரசுரம் வழங்கி தாமரை சின்னத்திற்கு ஓட்டு கேட்டு பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில்…
கடந்த முறை நான் அளித்த வாக்குறுதியின்படி, 6 சட்டப் பேரவை தொகுதிகளைச் சேர்ந்த 1,200 மாணவர்களுக்கு இலவச உயர்கல்வி அளித்துள்ளேன். இந்த முறை பெரம்பலூர் மக்களவைத் தொகுதி மக்களில் 1,500 ஏழை, எளியோருக்கு உயர்சிகிச்சை அளிக்க முடிவு செய்துள்ளேன். இதன்படி, ஒருவர் ரூ.10 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். மேலும் பொதுமக்களுக்கான தேவைகளை அறிந்து அதை செய்து தருவேன் என கூறினார். இந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவி பச்சமுத்து, பொதுச் செயலாளர் ஜெயசீலன், முதன்மை செயலாளர்கள் சத்தியநாதன், வெங்கடேசன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.