பாஜக ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்பு சட்டத்தை அழித்து விடுவார்கள் – திருச்சி மக்கள் அதிகாரம் மாநாட்டில் திருமாவளவன் பேச்சு!

0

மக்களவை தேர்தலில் பாஜகவை தோற்கடிப்போம் INDIA கூட்டணியை ஆதரிப்போம் என்கிற மையக்கருத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் திருச்சியில் பேரணி மற்றும் மாநாடு நடைபெற்றது‌. இதில் வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி, சட்ட மன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லாஹ், திமுக தலைமை கழக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் திராவிட, கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்த மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பாடகர் மற்றும் மாநில பொதுச்செயலாளர் கோவன் ” தேர்தலிலும் தோற்கடிப்போம் தெருவிலும் தோற்கடிப்போம்” மற்றும் “முஸ்லீமாக பிறந்தது குற்றமா”, “கட்டி‌முடிச்சாச்சு ராமர் கோவில்” சமாதானம் ஏன் ஒழிக்கப்பட வேண்டும் என்ற தலைப்பில் பாடல் பாடியதும் நிகழ்ச்சி தொடங்கியது.

- Advertisement -

தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசுகையில்…

தேர்தல் தொடர்பாக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிலைப்பாட்டை மக்கள் அதிகாரம் தற்போது கையில் எடுத்துள்ளது.
வரும் நாடாளுமன்ற தேர்தல் இந்திய வரலாற்றில் ஒரு இறுதி யுத்தம். மீண்டும் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் நாம் எந்த உரையாடல்களையும் நடத்த முடியாது. மண்ணையும் மக்களையும் காப்பாற்ற முடியாது. மிகப்பெரிய நெருக்கடிக்குள் நாம் அனைவரும் தள்ளப்படுவோம்.
காங்கிரஸ் கட்சி எந்த களத்தில் நின்று பா.ஜ.க வை எதிர்க்கிறதோ அதே களத்தில் நிற்க வேண்டிய தேவை மக்கள் அதிகாரத்திற்கும் வந்துள்ளது. பா.ஜ.க என்பது ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவு. ஒரு நூற்றாண்டுக்குள் எந்த நோக்கத்திற்காக ஆர்.எஸ்.எஸ் தொடங்கப்பட்டதோ அதை அடையப்போகும் மமதையில் ஆர்.எஸ்.எஸ் இருக்கிறது. அவர்கள் ஒன்று நினைத்ததில் தற்போது நடக்காமல் இருப்பது அரசியலமைப்பு சட்டத்தை தூக்கி எரிய வேண்டும் என்பது, அது இன்னும் அவர்களால் செய்ய முடியவில்லை.
இது தவிர பாபர் மசூதி இடிப்பு, காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை பறிப்பது, சி.ஏ.ஏ சட்டம் உள்ளிட்டவற்றை நடைமுறைப்படுத்தி விட்டார்கள். சனாதனம்படுத்தும் முயற்சியில் வெற்றி கண்டு வருகிறார்கள்.இந்தியாவை ஹிந்தி மயப்படுத்துவது, சமஸ்கிருதமயப்படுத்துவதில் வெற்றி கண்டு வருகிறார்கள். தேசத்தை கார்ப்பரேட் மயமாக்கி வருகிறார்கள். மக்களுக்கு எதிராக கருத்தியல் தளத்திலும், அரசியல் தளத்திலும், பொருளாதார தளத்திலும் இருக்கிறார்கள். எல்லாவற்றையும் சட்டங்கள் மூலமாகவும், நீதிமன்றங்கள் மூலமாகவும் நிறைவேற்றி வருகிறார்கள்.பா.ஜ.க வை தோற்கடிப்பது என்பது ஆர்.எஸ்.எஸ்ஸை வீழ்த்துவது தான்.
ஆர்.எஸ்.எஸ் இயக்கம் நேரடியாக தேர்தலில் போட்டியிடுவதில்லை. அழித்தொழிக்கும் நடவடிக்கையில் ஆர்.எஸ்.எஸ் வெளிப்படையாகவே ஈடுபடுகிறது. நூற்றாண்டை கொண்டாட உள்ள ஆர்.எஸ்.எஸ் இந்த நாட்டை இந்து நாடாக மாற்றும் நடவடிக்கைகளில் தான் ஈடுபட்டுள்ளது. சைவ மதம் உருவானதே பார்ப்பனிய ஆதிக்கத்தை எதிர்த்து தான். இன்று சைவமும், வைணவமும் விழுங்கப்பட்டு வருகிறது. பார்ப்பனியம் என்பது புத்தர் காலத்திலிருந்தே எதிர்க்கப்பட்டு வந்தது தான். ஆன்மிக தலத்திலேயே பார்ப்பனிய ஆதிக்க எதிர்ப்பு இருந்தது. இந்துத்துவா சனாதனமும் கார்ப்பரேட் அரசியலும் இணைந்துள்ளது. சனாதனம் என்பது பார்ப்பனியம் தான்.
இந்துத்துவாவின் எதிரி முஸ்லீம்களோ, கிறிஸ்துவர்களோ எதிரி அல்ல அவர்களின் உண்மையான எதிரி அம்பேத்கர் இயற்றிய இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம் தான். சங்பரிவாரர்களின் முதல் பகை நம் அரசியலமைப்பு சட்டம் தான் அவர்களின் பல்வேறு திட்டங்களுக்கு இன்றும் தடையாக இருப்பது அரசியலமைப்பு சட்டம் தான். மீண்டும் அவர்கள் ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்பு சட்டத்தை அழித்து விடுவார்கள் எனவே அவர்களை மீண்டும் ஆட்சிக்கு வர விடாமல் நாம் ஒன்றிணைந்து தடுத்திட வேண்டும் என்றார்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்