ரயில்வே ஊழியர்களின் பழைய ஓய்வூதிய திட்டத்தை மத்திய அரசு ஏற்காவிட்டால் பிப்ரவரி 16ம் தேதி மத்திய தொழிற்சங்கங்களை ஒன்றிணைந்து ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் – எஸ்.ஆர்.எம்.யூ தென் மண்டல தலைவர் ராஜா ஸ்ரீதர் திருச்சியில் பேட்டி
திருச்சி ரயில்வே ஜங்ஷன் வளாகத்தில் உள்ள ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் முன்பு எஸ்.ஆர்.எம்.யூ ரயில்வே தொழிற்சங்கம் சார்பில், மத்திய அரசின் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ரயில் நிலையங்களை தனியார் மயமாக்க கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 8 ஆம் தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. 4 ஆம் நாட்களாக நடைபெற்றுக் கொண்டு வருகிற இந்த போராட்டத்தில் இன்று எஸ்.ஆர்.எம்.யூ சங்கத்தின் தென் மண்டல தலைவர் ராஜாஸ்ரீதர், துணைப் பொதுச் செயலாளர் வீரசேகரன் உட்பட 500 க்கும் மேற்பட்ட ரயில்வே தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தென் மண்டல தலைவர் ராஜாஸ்ரீதர் கூறுகையில்…
நடைபெற்று வரும் உண்ணாவிரத போராட்டத்திற்கு மத்திய அரசு செவி சாய்க்காது என்றாலும் அடுத்த கட்ட போராட்டத்திற்கான முன்னோட்டம் என்பதை உணர்த்தவே இந்த போராட்டம் நடைபெறுகிறது. பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தனியார் மயமாக்களை கைவிட வேண்டும். குறைந்த ஓய்வூதியத்தை அதிகப்படுத்தி வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் 30 லட்சம் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற முன்வராவிட்டால் பிப்ரவரி 16 ஆம் தேதி மத்திய தொழிற்சங்கங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தார்.