திருச்சி சுப்பிரமணிபுரம் பகுதியில் தொப்பி வாப்பா பிரியாணி கடை புதிய கிளை திறப்பு விழா நடைபெற்றது. இதில் திரைப்பட இயக்குனர் அமீர் கலந்து கொண்டு புதிய கிளையை திறந்து வைத்தார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியது…..
கிராமங்கள் என்பது இந்தியாவின் முதுகெலும்பு ஆகும். ஆகையால் திரைத்துறையில் கிராமத்தை தவிர்த்து விட்டு எந்த படமும் எடுக்க இயலாது.
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர்சாதிக்கிற்கு, ஜாமீன் வழங்கப்பட்டது குறித்த கேள்விக்கு??
இந்த வழக்கை பற்றி எனக்கு முழுமையாக தெரியாது. நீதிமன்றத்தில் நீதியரசர் விசாரணையில் எந்த முகாந்திரமும் இல்லாமல் இருப்பதாக தெரிய வந்தது. ஆகையால் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதாக தெரிகிறது. மற்றபடி எனக்கு இந்த வழக்கை பற்றி எதுவும் தெரியாது.
அரசியல் வருகை குறித்த கேள்விக்கு?
அரசியலில் அனைவரும் இருக்க வேண்டும். தற்போது இருக்கும் நெருக்கடி சூழ்நிலையில் அரசியலுக்கு வந்தாலும் வரலாம். அதுதான் எனக்கு உள்ளுணர்வு சொல்கிறது. திராவிடம் என்ற சொல்லின் அர்த்தத்தை புரிந்தால் மட்டுமே திராவிடம் வேண்டும், வேண்டாம் என்று தெரியவரும். ஆரியத்திற்கு எதிரான சொல் தான் திராவிடம் ஆகும். திராவிடம் என்பது நம்முடைய மண், ரத்தம் உணர்வுகளில் கலந்து இருப்பது. ஆகையால் அனைவரும் திராவிடர்கள் தான், திராவிட சிந்தனைகள் உள்ளவர்கள் தான். பாசிச அரசியலுக்கு எதிராக யாரெல்லாம் அரசியல் செய்கிறார்களோ அது திராவிட அரசியலாகும். பாசிசதிற்கும், ஆரியத்திற்கும் எதிராக செய்யக்கூடிய அரசியல் திராவிட அரசியலாகும்.
சட்டம் ஒழுங்கு என்பது மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் சரியாக தான் உள்ளது. ஒரு வெள்ளை வேஷ்டியில் 4, 5 கரைகள் இருந்தால் எப்படி நம் கண்களுக்கு தெரியும். அதுபோல தான் சட்டம் ஒழுங்கு எல்லா காலத்திலும் சரி செய்யப்பட்டு கொண்டே இருக்கிறது. ஆளும் கட்சியை எதிர்த்து, அரசியல் செய்யும் எதிர்க்கட்சிகள் சட்டம் ஒழுங்கை பற்றி மட்டுமே கூற முடியும். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என பேசுவது ஒரு அரசியலாகும்.
விஜய் அரசியல் கட்சி தொடங்கியதற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்தேன். விஜய் என்னை அழைத்தால் நிச்சயம் நான் செல்வேன்.
ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள பட்ஜெட்டில் இருந்து ஒன்றிய அரசின் நிலைப்பாடு தெளிவாக தெரிகிறது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் தமிழ்நாட்டை புறக்கணித்தார்கள் என்பதற்கு சில அரசியல் கட்சித் தலைவர்கள் ஆதரித்ததுதான் வேதனை அளிக்கிறது. அனைத்து மாநிலங்களையும் ஒன்றிய அரசு சமமாக பார்க்க வேண்டும்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கினால் எனக்கு மகிழ்ச்சி.
விஜய் உடன் சீமான் இணைந்து செயல்பட உள்ளதாக அவரே தெரிவித்துள்ளார். என்னை பொறுத்தவரை விஜய் மற்றும் சீமான் ஆகிய இருவருடன் இணைந்து அரசியல் பயணம் செய்வதற்கு நான் தயாராக உள்ளேன் என தெரிவித்தார்.