திருச்சி இழந்த பெருமையை மீட்டெடுக்க தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளருக்கு வாய்ப்பு கொடுங்கள் – திருச்சியில் அமமுக வேட்பாளரை ஆதரித்து பேசிய அண்ணாமலை!
நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் அமமுக வேட்பாளர் செந்தில் நாதன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திருச்சி தென்னூர் பகுதியில் நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது அண்ணாமலை பேசுகையில்….
திமுக அளித்த 513 வாக்குறுதிகளில் 20-ஐ கூட நிறைவேற்றவில்லை. பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கவில்லை. திருப்புமுனையாகத் திகழும் ஊா் திருச்சிக்கு வளா்ச்சிப் பணிகள் ஏதும் செய்யவில்லை. திமுகவுக்கு திருச்சி மக்கள் மீது அக்கறையில்லை. அதனால் திமுகவுக்கு வாக்களிப்பது பிரயோஜனம் இல்லாதது. திருச்சி இழந்த பெருமையை மீட்டெடுக்க தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளா் செந்தில்நாதனுக்கு வாய்ப்பு கொடுங்கள்.
எங்களது வேட்பாளா் வெற்றி பெற்றால் திருச்சி வளா்ச்சியடைவது உறுதி. திருச்சியில் நானும், கூட்டணிக் கட்சித் தலைவா்களும் கலந்துகொள்ளும் பொதுக்கூட்டம் விரைவில் நடத்தப்படும் என பேசினார். இந்தப் பிரசாரத்தின் போது, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளான அமமுக, பாமக, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகளின் நிா்வாகிகள் பலர் கலந்து கொண்டனா்.