திருச்சியில் இருந்து சிங்கப்பூர் கடத்த முயன்ற ₹10.33 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்!
திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இலங்கை, துபாய், சிங்கப்பூர், மலேசியா, வியட்நாம் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் தங்கத்தை கடத்தி வருவதும், வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகள் வெளிநாட்டு கரன்சிகளை கடத்தி செல்வதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு திருச்சியில் இருந்து ஸ்கூட் விமானம் மூலம் சிங்கப்பூர் செல்லும் பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் ஒரு பயணி தனது உடைமையில் மறைத்து 10.33 லட்சம் இந்திய ரூபாய் மதிப்பிலான யூரோ மற்றும் ஜப்பான் கரன்சிகளை கடத்தி செல்ல இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவரிடம் இருந்து வெளிநாட்டு கரன்சிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.