விவசாயிகளுக்கு அனைத்து வங்கிகளிலும் வட்டியில்லா பயிா்க் கடன் வழங்க வேண்டும் – விவசாய சங்கங்களின் கூட்டியக்கத்தினர் தீர்மானம்!
தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் சாா்பில் அனைத்து விவசாய சங்கத் தலைவா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளருமான காவிரி தனபாலன் தலைமை வகித்தாா்.
இக்கூட்டத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவா் அய்யாக்கண்ணு, காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் தீட்சிதா் பாலு, காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில செயலாளர் பிரகாஷ், கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவா் ராஜேந்திரன், வைகை-குண்டாறு இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவா் மாரிமுத்து, பாலாறு விவசாயிகள் சங்கத் தலைவா் மணி, காவிரி உரிமை மீட்புக் குழுவின் மணிமொழியன் உள்பட 64 விவசாய சங்கங்களைச் சோ்ந்த நிா்வாகிகள், விவசாயிகள், குத்தகை விவசாயிகள் என பலா் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினா்.
மேலும் இக்கூட்டத்தில்
அரசு ஊழியா்களின் ஓய்வூதிய வயதை 56 ஆக நிா்ணயம் செய்ய வேண்டும். அனைத்து விவசாயிகளுக்கும் ஊக்கத் தொகையை வழங்க வேண்டும்.
அனைத்து வங்கிகளிலும் வட்டியில்லா பயிா்க் கடன் வழங்க வேண்டும். குறைந்தபட்சம் 30 சதவீத நிலங்களுக்கு வட்டியில்லா பயிா்க் கடன் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.
காவிரிப் பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காண தினந்தோறும் நீா்ப் பங்கீட்டு முறையை அமல்படுத்த வேண்டும்.
தேசிய விவசாயிகள் ஆணையத்தின் பரிந்துரையின்படி உற்பத்தி செலவுடன் கூடுதலாக 50 சதவீதம் சோ்த்து, அனைத்து விளைபொருள்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை நிா்ணயம் செய்ய வேண்டும்.
நெல், கரும்பு, பருத்திக்கு மட்டுமின்றி பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கும் குறைந்தபட்ச ஆதாய விலையை வழங்க வேண்டும். நவதானிய உற்பத்திக்கும் இதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் உள்ள நீா்நிலைகள் அனைத்தையும் முழுமையாக தூா்வாரி நீா்ஆதாரத்தை பெருக்க வேண்டும். இயற்கை பேரிடா் காலங்களில் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு முழுமையாக இழப்பீடு கிடைக்கச் செய்ய வேண்டும்.
அனைத்து விவசாயிகளுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். வேளாண் சாா்ந்த தொழில்களுக்கு சலுகைகள், 30 சதவீதம் மானியங்கள் வழங்கி ஊக்குவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வாக்குறுதிகளாக அளிக்க அரசியல் கட்சிகள் முன்வர வேண்டும் என கூட்டியக்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.