சட்டமன்றத் தேர்தலில் இ.யூ.முஸ்லிம் லீகிற்கு 5 தொகுதிகளை கேட்க உள்ளோம் – பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன்

மீனவர் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண இந்தியா – இலங்கை மீனவர் கழகம் என்ற அமைப்பை தொடங்கவேண்டும் என இலங்கை பிரதமர் ஹரிணி அமர சூர்யவிடம் வலியுறுத்தி னோம் என்று திருச்சியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் திருச்சி காஜா நகர் காயிதே மில்லத் தெருவில் உள்ள தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள் இல்லத்தில் 22.10.2025 புதன்கிழமை காலை 11.30 மணியளவில் செய்தியாளருக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது :

ஊடக நண்பர்கள்

திருச்சியை தமிழகத்தின் நெஞ்சத் தாமரை என்று பொதுவாகச் சொல்வது வழக்கம். இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் திருச்சி மாவட்ட நிர்வாகிகளும், மாநில அளவில் பொறுப்பு வகிக்கிற அன்புச் சகோதரர்களும் இங்கே இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருக்கிறார்கள். அப்படியான இந்தத் தருணத்தில் தமிழ்நாட்டின் நெஞ்சத் தாமரையான திருச்சி மாநகரிலிருந்து இந்த எளியவனின் அழைப்பை ஏற்று வருகை தந்துள்ள ஊடக நண்பர்களாகிய உங்கள் அனைவரையும் துவக்கமாக வரவேற்று, உங்கள் அனைவருக்கும் எனது மனநிறைவான நன்றியையும், வாழ்த்துகளையும் முதலில் தெரிவித்து மகிழ்கிறேன்.

தகைசால் விருது வழங்கிய முதல்வருக்கு நன்றி

தமிழ்நாட்டில் மக்களின் உணர்வுகளை முழுமையாகப் புரிந்துகொண்டு திராவிட மாடல் நல்லாட்சியை நடத்தி வரும் நமது முதலமைச்சரின் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான அரசு இந்த எளியவனுக்கு தகைசால் தமிழர் எனும் உயரிய விருதை வழங்கி கண்ணியப்படுத்தியுள்ளது. அதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் என் மனப்பூர்வமான நன்றியை கடமை உணர்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

தகைசால் தமிழர் என்ற சிறப்பிற்குரிய இந்த விருதை எனக்கு வழங்கியமை, தமிழ்நாட்டில் உள்ள 50 லட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் சமுதாய மக்கள் மட்டுமின்றி, கடல் கடந்து வாழும் தமிழ் பேசும் முஸ்லிம்கள் அத்தனை பேராலும் மனதாரப் பாராட்டி வரவேற்கப்படும் நல்ல விருதாக அமையப் பெற்றிருக்கிறது. அந்த அடிப்படையில்தான் – தமிழ்நாட்டில் மட்டு மில்லாமல் இலங்கைச் சீமையிலும், ஐக்கிய அரபு அமீரகத்திலும், சஊதி அரபிய்யா நாட்டிலும் இதற்காக வரவேற்பும், பாராட்டும் தெரிவித்து, தமிழ்நாடு அரசுக்கும் நன்றி சொல்லக்கூடிய ஒரு நிலை அன்றும் இருந்தது; இன்றும் இருக்கிறது. இந்நிகழ்வு தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

ஐக்கிய அரபு அமீரகம் துபை

அண்மையில் ஐக்கிய அரபு அமீரகம் துபைக்குச் சென்ற எனக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுவிட்ட காரணத்தால், தொடர்ந்த பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இயலாத நிலை ஏற்பட்டுவிட்டது. இதன் காரணமாக, சஊதி, மஸ்கட், பஹ்ரைன் போன்ற இடங்களில் விடுக்கப்பட்ட பாராட்டு விழா அழைப்புகளுக்கு என்னால் இசைவு தெரிவிக்க இயலாமல் ஆகிவிட்டது. உரிமையோடு வாழ்த்திக் கொண்டிருக்கும் அவர்களுக்கும் இந்தத் தருணத்தில் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வரும் 2026ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிறுத்தி தமிழ் நாட்டின் அரசியல் களத்தில் இன்று பல்வேறு நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. பலதரப்பட்ட அரசியல் வியூகங்களும், யூகங்களும், எதிர் பார்ப்புகளும் தொடர்ந்து வந்த வண்ணமாகவும் இருக்கின்றன.

சட்டமன்றத் தேர்தலில் திராவிட மாடல் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை மக்களிடம் நிறைவாக உள்ளது

இந்தச் சூழலில், தமிழ்நாட்டில் திராவிட மாடல் மக்களாட்சியைத் திறம்பட நடத்திக் கொண்டிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் அரசு செய்த, செய்து கொண்டிருக்கிற சேவைகளை மக்கள் மனதார ஏற்றுக் கொண்டிருப்பதை – குறிப்பாக மகளிர் சமூகம் அவர்களுக்காக வழங்கப்பட்டுள்ள அரசின் பல்வேறு திட்டங்களை ஏற்றுக் கொண்டிருப்பதையெல்லாம் சீர்தூக்கிப் பார்க்கும்பொழுது, வரும் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் திமுக தலைமைகளான திராவிட மாடல் அரசு மீண்டும் ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கைதான் மாநிலம் முழுக்க மக்களிடத்திலே நிறைவாக இருந்து கொண்டிருக்கிறது.

நாங்கள் அறிந்த வரை, தமிழ்நாட்டில் இப்பொழுது அரசியல் களத்தில் பல்வேறு கருத்துகள் பரிமாறப்பட்டு வருகின்றன. ஏற்கனவே இருக்கும் கட்சிகள் போக, புதிய கட்சிகளும் உருவாகி இருக்கின்றன. இப்படியான சூழலில், தமிழ்நாட்டில் திராவிட மாடல் நல்லாட்சியை நடத்திக் கொண்டிருக்கும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி அன்று இருந்தது போல், இன்று இருப்பது போல், வரும் 2026 சட்டமன்ற தேர்தலிலும் தொடர்ந்து அப்படியே இருக்கும். இதில் எங்களுக்கு சிறிதளவும் சந்தேகம் வரவில்லை.

அரசியலில் அவ்வப்போது ஏற்றத்தாழ்வுகள் நிகழ்ந் திருக்கின்றன என்றாலும், அடுத்து வரவிருக்கக் கூடிய 2026 சட்டமன்றத் தேர்தலைப் பொருத்த வரை, திராவிட மாடல் மக்களாட்சியை தமிழ்நாட்டில் திறம்பட நடத்திக் கொண்டிருக்கும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் அரசு தொடரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு வலுவாக உள்ளது. அந்த அடிப்படையில்தான் எங்களது களப்பணிகளும் நடைபெற்றுக் கொண்டிருக் கின்றன.

சிராஜுல் மில்லத்

நூற்றாண்டு விழா

எங்களது இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மறைந்த தலைவர், சந்தனத் தமிழர், சிந்தனைச் செல்வர் சிராஜுல் மில்லத் ஆ.கா.அ. அப்துஸ் ஸமத் சாஹிப் குறித்து – மேடையில் வீசிய மெல்லிய பூங்காற்று என்று முத்தமிழ் அறிஞர் கலைஞர் புகழ்ந்துரைத் திருக்கிறார். அப்படிப்பட்ட சிராஜுல் மில்லத் அவர்களது நூற்றாண்டு விழாவை இம்மாதம் 26ஆம் நாளன்று தலைநகர் சென்னையில் பெரியார் திடலில் – எல்லா அரசியல் கட்சித் தலைவர்களையும் அழைத்து, விமரிசையாக நடத்தத் திட்டமிட்டு இருக்கிறோம். அதில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் எனவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

8 ஆயிரம் மஹல்லா ஜமாஅத்கள்

தமிழ்நாட்டில் பள்ளி வாசல்களை அடிப் படையாகக் கொண்டு 8 ஆயிரம் மஹல்லா ஜமாஅத்துகள் உள்ளன. இதோ காஜா நகர் இருக்கிறது. இங்குள்ள மக்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் வகையில் இங்குள்ள பள்ளிவாசலில் மஹல்லா ஜமாஅத் கட்டமைப்பு இருக்கிறது. இப்படி மாநிலம் முழுக்க முஸ்லிம்கள் வாழும் எல்லாப் பகுதிகளிலும் மஹல்லா ஜமாஅத் கட்டமைப்பு இருக்கிறது.

கும்பகோணத்தில் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநாடு

இந்த அத்தனை மஹல்லா ஜமாஅத் நிர்வாகிகளையும் ஒன்றுதிரட்டி, ஒருங் கிணைத்து, நாங்கள் பல்வேறு மாநாடுகளை நடத்தி வந்து கொண்டிருக்கின்றோம். அந்த அடிப்படையில், வரும் டிசம்பர் 28ஆம் நாளன்று கும்பகோணத்தில் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநாட்டை நடத்தத் திட்டமிட்டு இருக்கிறோம். அதில் நமது முதலமைச்சர் அவர்களையும் சிறப்பு விருந்தி னராக அழைத் திருக்கிறோம். விரைவில் இசைவு தருவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

கேரள முஸ்லிம் கல்ச்சுரல் சென்டர்

கேரள மாநிலத்தில், கேரள முஸ்லிம் கல்ச்சுரல் சென்டர் – கேஎம்சிசி என்று அமைப்பை நடத்தி வருகிறார்கள். அதன் சார்பாக, சில ஆண்டுகளுக்கு முன் 100 ஏழைத் தம்பதியரைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு இலவசமாக திருமணம் செய்து வைத்து, சீர் வரிசைகளையும் எல்லோரும் வியக்கும் வகையில் கொடுத்து மகிழ்ச்சிப்படுத்தினர்.

திருச்சியில் ஜனவரி 8-ம் தேதி 30 தம்பதியருக்கு திருமணம்

அதுபோன்றதொரு நிகழ்ச்சியை வரும் ஜனவரி 08ஆம் நாளன்று திருச்சியில் நடத்தி, ஒரு மிகப்பெரிய கூட்டுக் கல்யாணத்தை விமர்சையாக நடத்தவிருக்கின்றனர். அதில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், இந்துக்கள் உட்பட 30 தம்பதியருக்குத் திருமணம் செய்து வைக்கப்பட உள்ளது.

இதற்கான தம்பதியரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை திருச்சி மாவட்ட முஸ்லிம் லீகிடம் அகில இந்திய கேஎம்சிசி அமைப்பு வழங்கி இருக்கிறது. அவர்களும் முறையாக ஆய்ந்தறிந்து, 30 தம்பதியரைத் தேர்ந்தெடுக்க உள்ளனர். ஊடக நண்பர்களாகிய நீங்களும் உங்களுக்குத் தெரிந்த – பொருளாதாரத்தில் நலிவுற்ற தம்பதியர் இருந்தால் அவர்கள் குறித்து நீங்கள் தெரிவிக்கும்போது அதையும் பரிசீலனையில் எடுத்துக் கொள்வர்.

முஸ்லிம்களுக்கு மட்டு மல்ல; எல்லா சமயங்களைப் பின்பற்றும் மக்களுக்கும் இந்தத் திருமண ஏற்பாடு செய்து வைக்கப்பட உள்ளது. அவர்களுக்கான சீர்வரிசைகள், மணப் பெண்களுக்கான நகை என தேவைப்படும் அனைத்தையும் ஏறத்தாழ நான்கைந்து லட்சம் ரூபாய் செலவில் செய்து கொடுக்க உள்ளனர்.

கேள்வி: அண்மையில் இலங்கைக்குச் சென்று, அந்நாட்டின் பிரதமரையும் சந்தித்துப் பேசி இருக்கி றீர்களே? அவர் களிடத்தில் தமிழ்நாட்டின் நலனுக்காக, தமிழர் நலனுக்காக என்ன கோரிக்கை வைத்தீர்கள்?

பதில்: ஆம், நாங்கள் எங்களது இலங்கை பயணத்தில் அந்நாட்டின் பிரதமர் ஹரிணி அவர்களைச் சந்தித்து, சுமார் ஒரு மணி நேரம் பேசினோம். மிக முக்கியமாக, தமிழ்நாட்டின் மீனவர் நலனை முன்வைத்து முக்கியமான கோரிக்கைகளை அவர்களிடத்தில் முன் வைத்திருக்கிறோம்.

தமிழ்நாடும், இலங்கையும் இருவேறு பகுதிகளாக நினைத்து நாம் வாழ்ந்து விடக்கூடாது. இந்தியாவும் – இலங்கையும் ஒருதாய் மக்கள் என்ற நினைவோடுதான் நாம் இருக்க வேண்டும்.

அண்டை நாடுகளாகிய நாம் அண்டை நாடுகளாகவே எப்பொழுதும் இருக்கக் கூடியவர்கள். அது ஒருபோதும் மாறப் போவதில்லை. அண்டை நாடுகளாக உள்ளவர்களிடையிலே பிணக்கும், பகைமையும் ஒரு காலத்திலும் இருக்க முடியாது; இருக்கவும் கூடாது. அண்டை நாடுகள் தமக்கிடையில் ஒருவருக் கொருவர் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடன் வாழ வேண்டும் என்று இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அடிக்கடி சொல்வார். அதை இந்தத் தருணத்தில் நான் நினைவுகூர விரும்புகிறேன்.

இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான தொடர்பு வரலாற்றுப் பூர்வமானது மட்டுமல்ல; இது காலத்துக்கும் தொடர்ந்து நீடிக்க வேண்டிய வலுவான தொடர்பு. இரண்டு நாட்டு மக்களுக் கிடையேயும் நல்லெண் ணமும், சுமுக நிலையும், நட்புறவும் தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. அதன் அடிப்படையில் இந்திய அரசும் இலங்கைக்கு பல்வேறு உதவிகளைத் தொடர்ந்து செய்து வருகிறது.

இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த உறவு என்றென்றைக்கும் பழுதில்லாமல் பக்குவமாகத் தொடர வேண்டும் என்று நாங்கள் இலங்கை பிரதமர் ஹரிணி அம்மையார் அவர்களிடம் சொன்னோம். அவரும் அதை மனதார ஏற்றுக்கொண்டார்.

அடுத்து, தமிழ்நாட்டின் மீனவர் பிரச்சினை இன்று நேற்றல்ல; தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் ஒரு நிரந்தர முடிவு கட்டும் வகையில் நீங்கள் புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் நன்றாக இருக்கும் என்றும் அந்த அம்மையாரிடத்தில் நாங்கள் முறையிட்டோம்.

தமிழ்நாட்டில் உள்ள மீனவர்களும், யாழ்ப்பாணத்தில் உள்ள மீனவர்களும் தமிழ் மொழியைப் பேசும் மக்கள்தான். இப்படியான மீனவர்களுக்கிடையிலே தொடர்ந்து பிரச்சினைகள் ஏற்படுவதும், அவர்களது படகுகளைக் கைப்பற்றுவதும், அந்த மீனவர்களைக் கைது செய்து சிறையில் அடைப்பதும் இரு நாடுகளிலும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக இருநாட்டு மீனவர்களுக்கிடையேயும் நல்லுறவும், நல்லிணக்கமும் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இந்த நல்லிணக்கத்தை நீடித்து நிலைக்கச் செய்ய வேண்டும். இந்தக் கோரிக்கைக்கு இலங்கை அரசு மனமுவந்து உட்பட வேண்டும் என்றும் நாங்கள் அம்மையாரிடம் சொன்னோம். அதையும் அவர் ஏற்றுக் கொண்டார்.

அதுபோல, தமிழ்நாட்டில் உள்ள மீனவர்களும் சரி; இலங்கையில் உள்ள மீனவர்களும் சரி; இருநாட்டு மீனவர்களுமே தனது வாழ்வாதாரத் தேவைக்காகத்தான் மீன்பிடித் தொழிலைச் செய்து வருகின்றனர். அப்படியான இந்த இருநாட்டு மீனவர்களையும் ஒன்றிணைத்து, ஐனேடி – ளுசi டுயமேயn கiளாநசநைள உடிசயீடிசயவiடிn – இந்திய இலங்கை மீனவர் கழகம் என்று ஓர் அமைப்பைத் தொடங்கி, அதில் கச்சத்தீவை அடித்தளமாகக் கொண்டு – இருநாட்டு மீனவர்களையும் இணைத்துக் கொண்டால், அவர்களுக்கிடையே நிலவும் அத்தனை பிரச்சினைகளுக்கும் அதன் மூலம் தீர்வு கிடைக்கும். இருநாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கும் எவ்வித பிரச்சனையும் இருக்காது. ஒற்றுமையாக இரு நாட்டு மீனவர்களும் மீன்பிடித்து, உலகம் முழுக்க விற்பனை செய்வார்கள். அதனால் வரும் ஆதாயத்தை ஆரோக்கியமான முறையில் பங்கு போட்டுக் கொள்வார்கள். இதற்காக மேற்படி அமைப்பைத் தொடங்குவது காலத்தால் மிகவும் அவசியமானதாக இருக்கிறது என்றும் நாங்கள் இலங்கை பிரதமர் அம்மையார் அவர்களிடம் எங்கள் சிந்தனையில் உதித்த புதிய கோரிக்கையாக வைத்தோம்.

இவைதான் நாங்கள் இலங்கைக்குச் சென்று, அந்நாட்டின் பிரதமர் அம்மையாரைச் சந்தித்துப் பேசிய விவரங்கள். இந்த விவரங்கள் அனைத்தையும் இலங்கையில் உள்ள ஊடகங்கள் விரிவாக செய்தியாக்கி இருக்கின்றன.

சுமார் ஒரு மணி நேரம் நாங்கள் சொன்ன கருத்துகளையெல்லாம் கூர்ந்து கவனித்து, அனைத்தையும் கருத்தில் ஏற்றிக்கொண்டு, “”இவ்வளவு நேரம் நீங்கள் சொன்ன கருத்துகள் அனைத்தும் மிகவும் முக்கியமானவையாகவும், பரிசீலிக்கத் தக்கவை யாகவும்தான் இருக்கின்றன… அடுத்து வரும் எங்களது கேபினட் கூட்டத்தில் இதை நான் முன்வைத்து, இருநாட்டு மீனவர்கள் பிரச்சனைக்கு ஒரு நல்ல முடிவு கிட்ட என்னால் ஆன அனைத்து முயற்சியையும் எடுப்பேன்”” என்று அவர் உறுதி அளித்தார்.

இலங்கையில் உள்ள ஊடகத்தினரை அத் தருணத்தில் நாங்கள் சந்தித்தபோது, “”நாங்கள் சந்தித்த இந்த இலங்கை நாட்டின் பிரதமர் படிடனநn டயனல றiவா படிடனநn டநயனள – தங்கமான வழிகாட்டலைக் கொண்ட தங்க மங்கையாக இருக்கிறார்”” என்று புகழ்ந்து கூறினேன். அதையும் சிலாகித்து அவர்கள் தங்கள் ஊடகங்களில் எழுதி இருக்கிறார்கள்.

கேள்வி: இந்தக் கோரிக்கையை இந்திய அரசின் கவனத்திற்கு எப்படிப் கொண்டு செல்லப் போகிறீர்கள்? அதை இந்திய அரசு எப்படி பரிசீலிக்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

Bismi

பதில்: இந்திய அரசுக்கு நாங்கள் புதிதாக எதையும் சொல்ல வேண்டிய நிலையே இல்லை. அண்மையில் தலைநகர் டெல்லிக்குப் பயணப்பட்டு வந்த இலங்கை பிரதமர் ஹரிணி அம்மையார் அவர்களே இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் உள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் அவர்களிடத்தில் தெளிவாக எடுத்துரைத்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் இருந்து சென்ற எங்களது சந்திப்பு குறித்து அவர் களிடம் எடுத்துக் கூறி, “”இப்படியான கருத்துகளை முன்வைத்திருக்கிறார்கள்… அதை நாங்களும் பரிசீலித்து ஆவன செய்வதாக அவர்களிடத்தில் கூறி இருக்கிறோம்”” என்று அவரே இந்தியப் பிரதமரிடத்திலும், வெளியுறவுத்துறை அமைச் சரிடத்திலும் சொன்னதாக டில்லியில் இருந்து வெளியான ஊடகங்களில் செய்தி வெளிவந்திருக்கிறது.

இது எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தைத் தந்தது. நாங்கள் சில முயற்சிகளை எடுத்து இந்திய அரசுக்குத் தெரிவிப்பதற்கு முன்னர் – இலங்கை பிரதமரே முன்வந்து எங்களது வருகை குறித்தும், நாங்கள் முன்வைத்த கோரிக்கைகள் குறித்தும் இந்திய அரசியல் யாரிடம் தகவலைத் தெரிவிக்க வேண்டுமோ அவர்களுக்கு முறைப்படி தெரிவித்திருப்பது எங்களது சிரமங்களைப் பெரிய அளவில் குறைத்து இருக்கிறார். இதன் காரணமாக இந்த கோரிக்கை தொடர்பில் ஒரு மிகப்பெரிய நன்மை கிட்டும் என்ற அழுத்தமான நம்பிக்கையும் எங்களுக்கு இருக்கிறது.

கேள்வி: தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் வருவதற்கு இன்னும் ஆறு மாத இடைவெளியே உள்ளது. திமுக தலைமையிலான கூட்டணியில் நீங்கள் தொடர்கிறீர்கள். வரும் தேர்தலில் எந்தெந்தத் தொகுதிகளை உங்கள் கட்சிக்காகக் கேட்பீர்கள்? திருச்சியில் போட்டியிடும் திட்டம் எதுவும் உள்ளதா?

பதில்: திமுக தலைமையிலான கூட்டணியில் இன்று நேற்றல்ல; கலைஞர் அவர்களது காலத்தில் இருந்தே நாங்கள் தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறோம். இப்பொழுது கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் கட்சிகள் இருந்தார்களா, இல்லையா; நாளை அவர்கள் இருப்பார்களா, இல்லையா என்ற விவாதம் எங்களுக்கு அவசியமற்றது. இந்திய யூனியன் முஸ்லிம் லீகைப் பொருத்த வரை நாங்கள் திமுக தலைமையிலான கூட்டணியில் அன்றும் இருந்தோம்; இன்றும் இருக்கிறோம்; நாளையும் இருப்போம்.

ஏன் இந்த அளவுக்கு நான் சொல்கின்றேன் என்றால், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கொண்டுள்ள கூட்டணி என்பது தேர்தலை மட்டும் மையப்படுத்தியது அல்ல. இது ஒரு கொள்கை அடிப்படையிலான கூட்டணி. திமுகவின் திராவிட அடிப்படைக் கொள்கைகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பின்பற்றும் இஸ்லாமின் அடிப்படைக் கொள்கைகளும் சற்றொப்ப ஒன்றாகவே இருக்கின்ற காரணத்தால், நாங்கள் இந்தக் கூட்டணியில் நல்ல உறவுடன் தொடர்ந்து கொண்டிருக்கிறோம். எனவேதான் தேர்தல் காலமாக இருந்தாலும் சரி; இதர தருணங் களாக இருந்தாலும் சரி; இதை நாங்கள் வெளிப்படையாகவே தொடர்ந்து சொல்லி வருகிறோம்.

கலைஞர் அவர்களிடத்தில் ஒரு முறை, “”நாங்கள் எல்லோ ரும் தங்களது தலைமையிலான திமுக கூட்டணியில்தான் இருக்கின்றோம்… எனவே, முஸ்லிம் சமுதாயத்திற்கு குறைந்தது 16 உறுப்பினர்கள் போட்டியிடுவதற்கான இடங்களை நீங்கள் ஒதுக்கித் தரவேண்டும்”” என்று அன்றே நாங்கள் கோரிக்கை வைத்தோம். நாங்கள் சொன்னதை அப்படியே ஏற்றுக்கொண்டு, ஒரு தேர்தலில் 16 தொகுதிகளை அப்படியே எங்கள் சமுதாயத்திற்கு ஒதுக்கியும் தந்தார். அதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகுக்கு ஐந்து தொகுதிகளைத் தந்தார்.

கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீடு நடைபெற்றுக் கொண்டிருந்த அந்தத் தருணத்தில், நான் வாகனத்தில் வெளியூர் சென்று கொண்டிருந்தேன். அப்பொழுது என்னைத் தொடர்பு கொண்டு பேசிய துரைமுருகன் அவர்கள், “”பேராசிரியர்! உங்கள் கட்சிக்கு ஐந்து தொகுதிகளை ஒதுக்கி இருப்பதால், மனிதநேய மக்கள் கட்சியும் ஐந்து தொகுதிகளைக் கேட்கிறார்கள்… என்ன செய்வது?”” என்று கேட்டார்.

“”ஐந்து தொகுதிகளை எங்களுக்குத் தந்திருக்கிறீர்கள்… மிக்க நன்றி. அவர்கள் கேட்கிறார்கள்… ஐந்து என்ன, ஆறு தொகுதிகளை வேண்டுமானாலும் கொடுங்களேன்”” என்று நான் கூறினேன். அந்தத் தேர்தலில் நாங்கள் கேட்டபடி 16 தொகுதிகளை எங்கள் சமுதாய மக்கள் போட்டியிடுவதற்காக ஒதுக்கித் தந்தார் கலைஞர் அவர்கள். ஆனாலும் அந்தத் தேர்தலில் நாங்கள் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றோம்.

ஆக இப்படியான நிலைகள் வரும், போகும். ஆனால் வரும் 2026 தேர்தலிலும் நாங்கள் இதே கூட்டணியில் தொடர்ந்து நீடிக்கிறோம். இதில் வேறொரு சிந்தனைக்கு இடமே இல்லை. கூட்டணி நிலைபாடு தொடர்பாக எதையும் நாங்கள் சிந்தையில் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. எங்கள் பாதை தெளிவானது. திமுக தலைமையிலான கூட்டணியைத் தவிர்த்து வேறு ஒரு கூட்டணியை நாங்கள் சிந்தித்ததில்லை என்பது மட்டுமல்ல; கனவில் கூட அப்படி நாங்கள் சிந்தித்ததில்லை.

திமுக தலைமையிலான இந்தக் கூட்டணியில் சென்ற தேர்தலில் மூன்று தொகுதிகளை இந்திய யூனியன் முஸ்லிம் லீகுக்கு ஒதுக்கித் தந்தார்கள். இப்பொழுது தமிழ்நாடு முழுவதிலும் இருந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நடவடிக்கைகள், அதன் அங்கத்தினரது எதிர்பார்ப்புகள், அது தொடர்பாக தொடர்ந்து வரும் தகவல்கள், எங்கள் மாவட்ட நிர்வாகங்களின் தீர்மானங்கள் என அனைத்தையும் வைத்துப் பார்க்கும் பொழுது, வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகுக்கு குறைந்தது 5 தொகுதிகளையாவது ஒதுக் கித் தர வேண்டும் என்று கோரிக்கை வைப்பதற்குத் தோதுவாக பொதுவான கருத்துகள் எங்களுக்கு வந்திருக்கின்றன.

தஞ்சை,, கடலூர், திருச்சி, சென்னை, திருநெல்வேலி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து எங்கள் கட்சிக்கு 6 தொகுதிகள் தந்தால் நல்லது என்ற நிலை உள்ளது. ஆனால், ஐந்தையாவது தர வேண்டுமென்று நாங்கள் கேட்கலாம் என்ற கருத்து இப்பொழுது எங்களுக்குள் இருக்கிறது. இதையே இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாவட்டக் கூட்டங்களிலும் தீர்மானங்களாக நிறைவேற்றி வெளியிட, அதை நீங்களும் ஊடகங்களில் செய்தியாகவும் வெளியிட்டிருக்கிறீர்கள்.

கேட்கும் இடத்தில் நாங்கள் இருக்கிறோம். கொடுக்கும் இடத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் இருக்கிறது. எங்களுக்கு வேண்டியதை நாங்கள் கூட்டணி தலைமையிடம் கேட்போம். நாங்கள் கேட்பதை அவர்களும் தருவார்கள்.சில தருணங்களில், நாங்கள் கேட்காததையும் கூட தந்து விடுவார்கள். எங்களுக்கிடையில் எந்தப் பிரச்சனையும் இல்லை.

எப்படி கலைஞர் அவர்களது காலத்தில் 16 தொகுதிகளை முஸ்லிம் சமுதாயத்திற்குத் தாருங்கள் என்ற கோரிக்கையை வைத்து, அவரும் குறைக்காமல் தந்தாரோ, அதே நிலை தொடர்கிறது. அதில் ஐந்து தொகுதிகளையாவது இந்திய யூனியன் முஸ்லிம் லீகுக்கு ஒதுக்கி தரவேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைக்கலாம் என்று இருக்கிறோம். தமிழ்நாடு முழுவதிலும் இருந்து எங்களது நிலை இப்படித்தான் இருக்கிறது. அதைப் பிரதிபலிக்கும் வகையில்தான் இங்கு நான் உங்களிடம் அந்தக் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.

கேள்வி: கேரளாவில் ஞஆஊ நிதி ஒதுக்கீடு தொடர் பாக இரண்டு கம்யூ னிஸ்ட் கட்சிகளுக்கு இடையில் விவாதங்கள் ஏற்பட் டிருக்கின்றன. தமிழ்நாட்டிலும் அது தொடர்வது போல் உள் ளதே? பாரதீய ஜனதா கட்சியும் இதுகுறித்து பேசுகிறதே? இந்தப் பிரச்சினையை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

பதில்: ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டேயாக வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு ஒன்றிய அரசு நிர்பந்தம் கொடுத்து வருகிறது. ஆனால் பாஜக அரசு கொண்டுவந்துள்ள தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தமிழ்நாடு அரசு மிகத் தெளிவாகவே கூறிவிட்டது.

அப்படி ஏற்றுக் கொண்டால், தமிழ்நாட்டில் பாரம்பரியமாகப் பின்பற் றப்பட்டு வரும் கல்விக் கொள்கை முறை அடிபட்டுப் போகும். தமிழ்நாட்டின் கல்விக் கொள்கை என்ன என்பது ஊருக்கும், உலகுக்கும் தெளிவாகத் தெரிந்தது. தமிழும், ஆங்கிலமும் இருக்கும் வகையில் என் மாநிலத்தின் கல்விக் கொள்கை தொடர்பான சட்டதிட்டங்கள் இருந்து கொண்டிருக்கின்றன. மூன்றாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு என தொடர்ந்து இவர்களுக்கு பொதுத் தேர்வுகளை நடத்தும் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு உடன்படாது என்று தெளிவாகவே நாம் சொல்லி இருக்கிறோம். நமக்காக தமிழ்நாடு அரசு இது தொடர்பில் மிகத் தெளிவாக தனது மறுப்பைச் சொல்லி இருக்கிறது.

ஆக, கேரளாவில் அப்படிச் சொல்கிறார்கள் என்றால், அது அந்த மாநிலத்தின் கொள்கை முடிவு. தமிழ்நாட்டைப் பொருத்த வரை ஒருக்காலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதைத்தான் தமிழ்நாடு முதலமைச்சர், கல்வித்துறை அமைச்சர் ஆகியோர் அரசின் சார்பில் மிகத் தெளிவாகக் கூறியிருக்கின்றனர் அது குறித்த செய்திகளையும் நீங்கள்தான் ஊடகத்தில் விரிவாக வெளியிட்டு இருக்கிறீர்கள்.

“”தேசிய கல்விக் கொள்கையில் சொல்லப் பட்டுள்ள திட்டங்களெல்லாம் எங்களுக்குப் பொருந்தவே பொருந்தாது. மூன்றாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு என்று பொதுத் தேர்வுகளை நடத்தி, அதில் தேர்ச்சி பெறுவோர் – தேர்ச்சி பெறாதோர் என்றெல்லாம் பிரிக்கும் நிலை எங்கள் மாநிலத்தில் கிடையாது”” என்று தெளிவாகக் கூறியிருக்கிறார்கள்.

ஓர் அம்சத்தை நீங்கள் மிக நன்றாக சிந்தையில் ஏற்றிக்கொள்ள வேண்டும். ஜிஎஸ்டி தொடர்பாக நாடு முழுக்க பிரச்சனை இருந்து கொண்டிருக்கிறது. இது குறித்து எல்லா மாநில நிதி அமைச்சர்களையும் வரவழைத்து, என்னென்ன திருத்தங்கள் – மாற்றங்களைச் செய்யலாம் என்று ஒன்றிய அரசு ஆலோசனைகளைக் கேட்டு, அதன் அடிப்படையில் பல மாற்றங்களையும் செய்திருக்கிறது. அந்த மாற்றங்களால் எல்லா மாநிலங்களுக்கும் நல்லதும் நடந்திருக்கிறது. எனவே அதை எல்லோரும் வரவேற்றுக் கொண்டும் இருக்கின்றனர்.

எப்படி ஜிஎஸ்டி தொடர்பில் எல்லா மாநிலத்தின் நிதி அமைச்சர் களையும் வரவழைத்து, கலந்தா லோசனை செய்து, அவர்களின் கருத்துகளையும் உள்வாங்கி, தேவையான திருத்தங்களைச் செய்து, திட்டங்களை அறிவித்திருக்கிறார்களோ, அதன் காரணமாக நாட்டு மக்களுக்கு நல்ல பயன் கிடைத்திருக்கிறதோ, அதை யெல்லாம் மாநில மக்களும் வரவேற்று இருக்கிறார்களோ – இந்த நல்ல முறையை கல்வித்துறையிலும் ஏன் இதுவரை செய்யவில்லை என்றுதான் நாங்கள் கேட்கி றோம்.

தேசிய கல்விக் கொள்கை என்று நீங்களாக உங்கள் கற்பனையின் அடிப்படையில் ஒன்றை வகுத்துக் கொண்டு, நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகள் எப்படி இருக்கின்றன என்பன குறித்தெல்லாம் எதையும் கணக்கில் எடுக்காமல் திட்டங்களை அறிவிக்கும்போது, எல்லா மாநிலங்களிலிருந்தும் அதற்கு எதிர்ப்பு வருகிறது. தமிழ்நாடு அதில் மிகத் தெளிவாக இருக்கிறது.

ஊடக நண்பர்களாகிய உங்களிடத்தில் நான் அன்போடு வைக்கும் வேண்டு கோள் என்னவெனில், எப்படி ஜிஎஸ்டி தொடர்பில் எல்லா மாநில நிதி அமைச்சர்களையும் வரவழைத்து, அவர்களோடு கலந்தாய்வு நடத்தி, அவர்களின் கருத்துகளை உள்வாங்கிக் கொண்டு, தேவையான திருத்தங்களையும் செய்து, திட்டத்தை அறிவித்தீர்களோ அதே நடைமுறையில் நாட்டளவில் எந்தத் திட்டங்களை அறிவிப்பதாக இருந்தாலும் – அது தொடர்பான மாநில நிர்வாகத்தினரை வரவழைத்து கலந்தாலோசித்து, அவர்களின் கருத்துக்களையும் உள்வாங்கி, அதன் அடிப்படையில் அறிவிக்க வேண்டும் என்ற கருத்து வலுவாக உள்ளது. அதை வலியுறுத்தி உங்களது எழுத்துகள் அமைந்தால் நன்றாக இருக்கும். அதை அரசு ஏற்றுக் கொண்டால் நாட்டு மக்களுக்கு நல்லது கிடைக்கும். எவ்வித பிரச்சனையும் ஏற்படாது. இனி வருங்காலத்திலாவது அரசு அதைச் செய்ய வேண்டும் என்று நாங்கள் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

கேள்வி: வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் புதிதாக பல கட்சியினரும் களம் காண வருகின்றனரே? எனவே இந்தத் தேர்தல் களம் எப்படி இருக்கும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

பதில்: தமிழ்நாட்டில் மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு, அவர்கள் கோரிக்கையாக வாய் திறந்து முன்வைப்பதற்கு முன்பே அவர்களுக்குத் தேவையானவற்றை குறிப்பால் அறிந்து உடனுக்குடன் செய்து தரக்கூடிய – திமுக தலைவர் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் மக்களாட்சி திறம்பட செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நற்பெயருடன் திமுக கூட்டணி வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் நிச்சயமாகப் போட்டியிட்டு மகத்தான வெற்றியைப் பெறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு மிக வலுவாக உள்ளது என்பது முதல் அம்சம்.

அதுபோல, அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் இப்பொழுது பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தல் களத்தைக் காண உள்ளது. இது ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவு. இந்தக் கூட்டணியில் தமிழக வெற்றிக் கழகம் – தவெக இணையும் என்ற பேச்சும் இருந்து கொண்டிருக்கிறது. ஊடகத்திலும் அது தொடர்பான தகவல்கள் அடிக்கடி செய்திகளாக வந்து கொண்டிருக்கின்றன. அப்படி அமையப் போகிறதா, இல்லையா என்பது குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது. ஆக இது இன்னொரு கூட்டணியின் நிலை.

அதுபோல, தாங்கள் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக சீமான் அவர்கள் அறிவித்து, சில தொகுதிகளுக்கு வேட்பாளர்களையும் அறிவித்திருக்கிறார். போகிற போக்கை பார்த்தால், தமிழ்நாட்டில் வரும் தேர்தலில் இப்படியாக மூன்று அணிகள் களம் காணும் என்று தெரிகிறது.

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் எவ்வித மாற்றமும் இல்லை. அது என்றும் போல் தொடர்ந்து வலிமையாக இருந்து கொண்டிருக்கிறது. இந்தக் களத்தில் அதிமுக – பாஜக கூட்டணியுடன் தமிழக வெற்றிக் கழகமும் இணைந் தால் அது ஒரு வலிமையான கூட்டணியாகத்தான் திகழும். தேர்தல் காலத்தில் போட்டியும் கடுமையாகத்தான் இருக்கும்.

ஆக, வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி அமைப்புகள் எப்படி இருக்க போகின்றன என்பதை இப்பொழுது இருப்பதை வைத்து நான் சொல்லி இருக்கின்றேன் என்றாலும், காலப்போக்கில்தான் அதன் சரியான வடிவம் தெரியவரும்.

கேள்வி: அப்படி திமுக தலைமையிலான கூட்டணி தவிர்த்து மற்ற அனைவரும் ஒரே கூட்டணியில் இணைந்தால் போட்டி இன்னும் மிகக் கடுமையாக இருக்கும்தானே?

பதில்: தேர்தல் என்பதே சவால்தானே? ஒரு கூட்டணியில் கட்சிகள் அதிகமாகச் சேரும்போது அந்த சவால் கூடத்தானே செய்யும்?

தமிழக வெற்றி கழகம் என்று கூறுகிறார்களே அந்தக் கட்சி இதுவரை தேர்தலில் போட்டியிடவில்லை. இப்பொழுதுதான் கட்சி தொடங்கப்பட்டு, முதல் தேர்தலைச் சந்திக்கவிருக்கிறது. அதன் தலைவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் நிறைய மக்கள் கூட்டம் சேர்கிறது. அண்மையில் கரூரில் நடந்த நிகழ்வு உங்களுக்குத் தெரியும்.

ஆக, கூட்டங்கள் சேர்வதை வைத்தெல்லாம் தேர்தல் வெற்றியைக் கணக்கெடுத்து விட முடியாது. அறிஞர் அண்ணா அவர்களது காலத் திலும், காமராஜர் அவர்களது காலத்திலும், கலைஞர் அவர்களது காலத்திலும் மக்கள் கூட்டம் நிறைய சேரத்தான் செய்தன. ஆனால் அவற்றை வைத்தெல்லாம் தேர்தல் வெற்றியைக் கணித்து விட முடியாது என்று அந்தக் காலத்திலேயே சொல்வார்கள் அல்லவா?

எனவே, தேர்தல் என்பது வேறு; பொது நிகழ்ச்சிகளில் கூடும் கூட்டம் என்பது வேறு. கூட்டங்கள் சேருவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். அதே காரணம் தேர்தலிலும் பிரதிபலிக்கும் என்றெல்லாம் எதிர்பார்க்க முடியாது. தேர்தல் முடிவைப் பொருத்த வரை மக்கள்தான் எஜமானர்கள் . அவர்கள் யாரை விரும்பித் தேர்ந்தெடுப்பதற்காக வாக்களிக்கிறார்களோ அவர்கள்தான் வெற்றியைப் பெறுவார்கள்.

எம்ஜிஆர் இடத்தில் முன்பு நாங்கள் பேசிக் கொண்டிருந்தபோது கூட, “”பாய் தேர்தல் முடிவை யெல்லாம் இப்பொழுதே சொல்லிவிட முடியாது… அதை தேர்தல் நடைபெறுவதற்கு முந்தைய – பரப்புரைகள் முடிவுற்ற அந்த கடைசி மூன்று நாட்கள்தான் முடிவு செய்யும்”” என்று அவர் கூறுவார்.

“”இறைவன் தான் விரும்பியோருக்கு ஆட்சி அதிகாரத்தைக் கொடுப்பான், விரும்பாதவர்களிடமிருந்து அதைப் பிடுங்கி விடுவான்”” என்று ஆன்மிகத் தத்துவம் கூறுவார்கள். அந்த ஆன்மிகத்தை இறைவனை யார் நம்புகிறார்களோ, இல்லையோ – நான் நம்புகிறேன். இறைவன் நாடியதுதான் நடக்கும். எனவே அரசியலில் அப்படி இப்படி என ஆயிரம் நிகழ்வுகள் நடக்கத்தான் போகின்றன. அரசியலே ஒரு மிகப்பெரிய சவால்தான்.

எங்களைப் பொருத்த வரை, திராவிட மாடல் ஆட்சியை அனைவருக்குமான நல்லாட்சியாக திறம்பட நடத்திக் கொண்டிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களது ஆட்சி மக்க ளிடையே அசைக்க முடியாத வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இதுதான் மக்களுக்கான ஆட்சியாகத் தொடர்ந்து இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். மக்களின் இந்த ஏகோபித்த வரவேற்பு வரும் தேர்தலில் பெரும் வெற்றியை நிச்சயம் பெற்றுத் தரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு வலுவாக உள்ளது.

இது யூகம் அல்ல; நம்பிக்கை. இதை ஏதோ நாங்கள் கனவு கண்டதை வைத்துச் சொல்லவில்லை. ஊடகங்கள் வாயிலாக நீங்கள் எதை செய்திகளாகவும், தகவல்களாகவும் வெளியிட்டுக் கொண்டிருக்கிறீர்களோ அவற்றை யெல்லாம் சீர்தூக்கிப் பார்த்து, அவற்றின் அடிப்படையில்தான் இந்த நம்பிக்கையை நாங்கள் வெளிப் படுத்திக் கொண்டிருக்கிறோம்.

எனவே தேர்தல் களத்தில் எத்தனை கூட்டணிகள் வந்தாலும், அதில் எத்தனை வகையான கட்சிகள் இடம் பெற்றாலும், மாறினாலும், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி நிச்சயமாக வெல் லும். அதைத்தான் வருங்கால வரலாறும் சொல்லும்.

இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேசினார்.

பேட்டியின்போது இந்திய யூனியன் முஸ்லிம் மாநில செயலாளர் ஆடுதுறை ஷாஜஹான், மாநில துணைச் ஹாஜி வி. எம். பாரூக், திருச்சி தெற்கு மாவட்டத் தலைவர் கே.எம்.கே. ஹபீபுர் ரஹ்மான் மாநில எம். எஸ். எப். தலைவர் அன்சர் அலி, திருச்சி தெற்கு மாவட்ட யூத் லீக் மாவட்ட தலைவர் அஜீம், திருச்சி தெற்கு மாவட்ட யூத் லீக் மாவட்ட செயலாளர் மைதீன் அப்துல் காதர், திருச்சி தெற்கு மாவட்ட துணைத்தலைவர் அலாவுதீன், மாவட்ட ஆலோசனை குழு உறுப்பினர் ஆட்டோ அப்துல் சலாம், மாநில மகளிர் அணி செயலாளரும், ஆடுதுறை பேரூராட்சி கவுன்சிலர் ஷமீம் நிஷா, திருச்சி தெற்கு மாவட்ட மகளிர் அணி தலைவி ஆரிபா, அயலக அணியின் மாநில துணைத்தலைவர் என். கே. அமீருதின், ஊடகவியலாளர் திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது, திருச்சி தெற்கு தொண்டரணி தலைவர் காஜா அலாவுதீன், கே. எம். சி. சி. அப்துல் சமது மற்றும் பலர் உடன் இருந்தார்கள்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்