தாய்லாந்தில் நடைபெற்ற சிலம்பப் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு!
ஜல்லிக்கட்டு போட்டி போல் சிலம்பத்தை ஊக்குவிக்க வேண்டும் – யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் தமிழக அரசுக்கு கோரிக்கை!
சிலம்பம் என்பது ஒரு தமிழர் தற்காப்புக் கலை மற்றும் தமிழர்களின் வீர விளையாட்டு ஆகும். இன்றைய தலைமுறையில் ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமிகள் என்று எந்த பாகுபாடும் இல்லாமல் இருபாலரும் சிலம்பாட்டத்தைக் கற்று கொண்டு விளையாடி வருகின்றனர். திருச்சி மாவட்ட யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் சார்பில் சிலம்பம் பயிற்சி கடந்த நான்கு வருடமாக நடத்தி வருகின்றனர். திருச்சியில் நடந்த மாவட்ட அளவிலான சிலம்ப போட்டிகளிலும் மாநில அளவிலான சிலம்பப் போட்டிகளிலும் கலந்து கொண்டு பதக்கங்கள், விருதுகள் பெற்றுள்ளனர்.
அந்த வகையில் கடந்த அக்டோபர் மாதம் நடந்த தேசிய அளவிலான சிலம்ப போட்டியில் இரண்டு மாணவர்கள் முதலிடம் பிடித்தார்கள். இந்நிலையில் தாய்லாந்தில் ஜனவரி 26, 27 ஆகிய இரண்டு நாட்கள் உலக அளவில் சிலம்ப போட்டிகள் நடைபெற்றது. இதில் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, ஸ்ரீலங்கா உள்ளிட்ட ஐந்து நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர். இப் போட்டியில், ஒற்றைக் கம்பம், இரட்டைக் கம்பம், சண்டை பயிற்சி, போன்ற சிலம்பப் போட்டி நடந்தது.
இந்த போட்டியில் தமிழகத்தில் இருந்து திருச்சி மாவட்டத்தை சேர்ந்த மூன்று மாணவர்கள் முதலிடம் பிடித்துள்ளனர். முகமது இர்பான், முகமது சல்மான், முகமது ஹர்ஷத், ஆகிய மாணவர்கள் உலகளாவிய சிலம்ப போட்டியில் முதலிடம் பிடித்து விருதுகளையும், பதக்கங்களையும் பெற்றுள்ளனர். இதனையடுத்து இன்று திருச்சி ரயில்வே நிலையம் வந்த மூன்று மாணவர்களுக்கு சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இது குறித்து யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் மாநில தலைவர் ரபீக் செய்தியாளர்களிடம் கூறுகையில்…
தமிழர்களின் அடையாளமாக இருக்கக்கூடிய சிலம்பப் போட்டியை தமிழக அரசு ஊக்குவிக்க வேண்டும். தற்பொழுது விளையாட்டு நலன் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஜல்லிக்கட்டு போட்டிக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் போல சிலம்ப போட்டிக்கும் முக்கியத்துவம் தமிழக அரசு கொடுக்க வேண்டும் என கூறினார்.