தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் முதல் கட்டமாக நடைபெற உள்ளது. இந்த நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரூ. 50 ஆயிரத்திற்கும் மேல் ஆவணங்கள் இன்றி பணம் எடுத்து செல்லக்கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த நிலையில் பறக்கும் படை அதிகாரிகள் மாநகர், புறநகர் மற்றும் தேசிய நெடுஞ்சாலை, மாவட்ட எல்லை பகுதிகளில் உள்ள சோதனை சாவடியில் தீவிர வாகன சோதனையில் இரவு பகலாக சுழற்சி முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் திருச்சி – அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் நகர் என்ற பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் ரஞ்சித் குமார் தலைமையில் காவல்துறை துணை ஆய்வாளர் கவுசல்யா குழுவினர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது கேரளா மாநிலம் பதிவு எண் கொண்ட கருப்பு நிற கார் ஒன்று வந்தது. அந்த காரை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அதில் காரை ஓட்டிக் கொண்டு வந்த நபர் தமிழ் மற்றும் மலையாள திரைப்பட நடிகையான மஞ்சு வாரியர் என்பது தெரிய வந்தது.
இதை அடுத்து அவரது விவரங்களை கேட்டுக் கொண்டே காரை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது காரில் இருப்பது அஜித்துடன் துணிவு மற்றும் தனுஷ் உடன் அசுரன் போன்ற தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்த பிரபல நடிகை என தகவல் வேகமாக பரவியது.
இதனை தொடர்ந்து பின்னால் நின்று கொண்டிருந்த கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் அவருடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
கூட்டம் அதிகமாக கூடுவதை தவிர்க்க வேகமாக அவரது காரை பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்து, விவரங்களைப் பெற்றுக் கொண்டு உடனடியாக அங்கிருந்து அவரை அனுப்பி வைத்தனர்.
பிரபல நடிகையின் காரை தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்ட சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.